பாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை!

0
448

ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம்
உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்”
-யோகர் சுவாமிகள்.

என்ற வாசகத்தை பின்பற்றும் யாழ். ஈழநாடு நாளிதழுக்கு வணக்கம்!
“படிப்பது தேவாரம், இடிப்பது சிவன்கோவில்” என்பது போன்று,

பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சில ஊடகங்கள் செய்திகளைப் பரபரப்பாக்குவதற்கு தலைப்புகளையிட்டு, சமூக நலன்களையோ, இனத்தின் உணர்வுகளையோ புரிந்து கொள்ளாமல், தங்கள் விளம்பரத்திற்கும் வியாபாரத்திற்கும் தீனிபோடும் வகையில் செய்திகளைப் பரப்புவதை அண்மைக் காலத்தில் சில ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.
‘ஊடகதர்மம்’ என்றால் கிலோ என்னவிலை எனும் ஊடகங்களே இன்று மலிந்து காணப்படுகின்றன. செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யாமல். செய்வதற்கான வளங்கள் இல்லாமல் ஒரு முகவரையோ, இருவரையோ வைத்துக்கொண்டு, அவர்களால் வெளிவிடப்படும் செய்தி சரியென முந்திக்கொண்டு செய்திகளைப் பரப்பி வருவது அண்மையிலே காணப்படுகின்றது.
ஊடகங்கள் சமூகத்தின் கண்ணாடியாகத் திகழ்வதோடு அரசையோ, சமூகத்தையோ தனது கருத்தாக்கத்தினூடாக நல்வழியில் நடாத்திச் செல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளது. அதனைப் ஊடக தர்மம் என்பார்கள். இத்தலைப்பையிட்ட யாழ். ‘ஈழநாடு’ நாளிதழில் உள்ளடக்கத்தில் தடையைப்பற்றி ஏதும் பேசப்படவில்லை. பேசாதது ஏன்? இந்த நாளிதழின் செய்தியை நம்பி வாசிக்கும் தமிழ்வாசகரை ஏமாற்றும் நடவடிக்கையாகவே காணப்படுகிறது. இது எதிர்காலத்தில் தமிழ்மக்கள்,யாழ் ஈழநாடு’ நாளிதழ் சிறிலங்கா அரசின் ஊதுகுழுல் என்ற முடிவுக்கே வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
பாரிசில் லாச்சப்பல் பகுதியில் மாவீரர் பிரசுரம் அகற்றப்பட்டது உண்மை. இதற்குப் பின்னால் சிறிலங்கா அரசின் சதித்திட்டம் உள்ளது என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதானிக்கப்பட்டு வந்த ஒன்று. இதற்கான சட்ட நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இங்கு நிலவும் தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் போலவே தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் பார்க்கின்றார்கள். இதனை நீக்குவதற்கான முயற்சிகள் பல அமைப்புகளால் நீதிமன்றங்களூடாக எடுக்கப்பட்டு, நீதிமன்றங்களும் பயங்கரவாத அமைப்புக்கான வலுவான சாட்சியங்கள் இல்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுதலைப் போராட்ட அமைப்பாகவும் நீதி வழங்கி உள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதர நலன் கருதி தடையை இன்னும் நீக்காமலிருப்பது சாதகமற்றதே. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் சிறிலங்காவின் அடிவருடிகள், தமது எச்சில் பிழைப்பிற்காக இப்படியான குழப்பங்களுக்குத் துணைபோகின்றார்கள். இதனை இங்கு வாழும் தமிழ் மக்களும் அறிவார்கள்.
பிரான்சில் மாவீரர்நாள் நினைவுகூரலுக்கு எவ்வித தடையும் இல்லை என்பதே உண்மை. இதனை அறியத்தருவதோடு. கொவிட்19 பெருந்தொற்று சுகாதார சட்டமுறைகளை மதித்து தமிழீீழத் தேசிய மாவீரர் நாள் 2020 நினைவு கூரல் எம்மால் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் உலாவரும் ஊடகங்கள் இனிவரும் காலங்களில் பொறுப்போடு தகவல்களை வெளியிடுவதே ஊடக தர்மமாக அமையும் என்பதையும் தெரிவித்து நிற்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பிரான்சு மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு.

24.11.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here