மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை காவல்துறையினர் மீளப் பெற்றுள்ளனர்.
வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி காவல்துறை நிலையங்களின் அதிகாரிகள் மாவீரர் நாளுக்குத் தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு பதில் நீதிபதியால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிரந்தர நீதிபதி விடுமுறையில் உள்ளமையால் வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மூன்று காவல்துறை நிலையங்களையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தாங்கள் குறித்த மனுக்களை மீளப்பெறுவதாக மன்றுக்கு அறிவித்தனர்.
இதனடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்கப்படவில்லை என்று மன்றின் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.