பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.பரமலிங்கம் மீது சிறிலங்கா அரச கைக்கூலிகள் தாக்குதல் நடத்தியத்தற்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-
பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிறிலங்கா கைக்கூலிகளால் கடந்த 18.06.2015 வியாழக்கிழமை நள்ளிரவு எமது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலானது எமது தேசிய செயற்பாடுகளை முற்றாக முடக்கும் திட்டமிட்ட செயல் எனவே நாம் கருதுகின்றோம்.
வேலை முடிந்து வீடு செல்லும் வழியில் அவருடைய வீட்டுக்கு அருகில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் அவரைப் படுகொலை செய்யும் நோக்குடன் காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள் சிங்கள அரசுக்கு சர்வதேச ரீதியில் பல அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தில் சிறிலங்கா அரசினாலும் அதன் கைக்கூலிகளாலும் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு, சனநாயக உரிமை மறுக்கப்பட்டு, ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் போலவே புலம்பெயர் நாடுகளிலும் ஆயுதக் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் 2012 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களை சிங்களம் பலி எடுத்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறே, பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோர் 26.10.1996 அன்று பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து படுகொலைசெய்யப்பட்டமை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி அவர்கள் 31.10.2011 பாரிசில் எமது பணிமனைக்கு அருகில் சிறிலங்கா கைக்கூலிகளால் வெட்டிப் படுகாயப்படுத்தி, பின்னர் 08.11.2012 அன்று பாரிசில் எமது பணிமனைக்கு முன்பாகப் படுகொலை செய்யப்பட்டமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக பாரிசில் இருந்து வெளியாகிய ஈழமுரசு பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளங்கள் யாவும் 18.09.2014 அன்று ஆயுதம் தரித்த கொலைவெறியர்களின் எச்சரிக்கை காரணமாக முடக்கப்பட்டிருந்தன.
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் 04.03.2015 அன்று எமது பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் அவருடைய வீட்டுக்கு முன்பாக வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து, சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 17.06.2015 புதன்கிழமை பிரான்சில் செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் வீட்டிற்குச் சென்ற இருவர் அச்சுறுத்தல் விடுத்துச்சென்றதுடன் நிற்காமல் மறுநாள் எமது பொறுப்பாளர் மீது தமது கையாலாகாத் தனத்தைக் காட்டியுள்ளனர்.
இன்று எமது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களையும் கடும் விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
இவ்வாறான செயல்களை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழ்த்தேசிய செற்பாடுகளை முடக்கும் நோக்குடன் தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள சிறிலங்கா அரச கைக்கூலிகளை இனங்கண்டு அதனை முறியடிப்போம் என திடசங்கற்பம் பூணும் இதேவேளை குறித்த புல்லுருவிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு பிரான்சு காவல்துறையினருக்கு எமது மக்கள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கும்படி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு