அதிபர் மக்ரோனின் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட ருவீற்றர் பதிவை பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஷெரீன் மஸாரி, அண்மையில் தனது சமூகவலைத்தளப் பதிவு ஒன்றில் “யூதர்களுக்கு நாஸிக்கள் செய்ததையே முஸ்லிம்களுக்கு எதிராக மக்ரோன் செய்கிறார்” என்று கருத்திட்டிருந்தார்.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்Jean-Yves Le Drian அதனை “ஒரு வெறுக்கத்தக்க, தவறான கருத்து” கருத்து என்று சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்.
” பிரான்ஸ் குடியரசையும் அதன் ஜனாதிபதியையும் அவமதிக்கும் வகையில் அதிர்ச்சியூட்டும் கருத்தை பாகிஸ்தான் அரசின் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார். வெறுக்கத்தக்கதும் வன்முறையைத் தூண்டக் கூடியதுமான ஒரு சித்தாந்தத்துடன் தொடர்புபட்ட வெட்கக் கேடான பொய்யான கருத்து அது” என்று பிரெஞ்சு அமைச்சர் பாகிஸ்தானைச் சாடியுள்ளார்.
” பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்தை அந்நாட்டு அரசு சரிசெய்து கொண்டு கௌரவமான வழிமுறைகளுடன் கூடிய பேச்சுக்கான வழியைக் கண்டுபிடிக்க முயலவேண்டும்” என்று பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
‘சார்ளி ஹெப்டோ’ பத்திரிகையில் வெளியான கருத்துச் சித்திரங்களுக்கும் அதனோடு தொடர்புபட்ட பிரெஞ்சு அரசுத் தலைவரினது கருத்துகளுக்கும் பாகிஸ்தான் நாட்டில் கடும் எதிர்ப்பலை கிளம்பி இருந்ததமை தெரிந்ததே.
(படம் :சார்ளி ஹெப்டோ கருத்துச் சித்திரங்களுக்கும் எதிராக அண்மையில் கராச்சியில் நடந்த கண்டனப் பேரணிக் காட்சி)
22-11-2020. ஞாயிற்றுக்கிழமை.