வரலாறாய் எமக்குள் வாழ்பவர் நினைவை தடை போட எப்படி முடியும்…!

0
317

விளக்கேற்றத் தடையாம்…!

எப்படிச் சொல்வது
உங்களைப் பற்றி…
வர்ணிக்கக் கூட
வார்த்தைகள் இல்லா
வடித்தெடுத்த…….
அறிவாளி போங்கோ…
நினைவுக்குக் கூட
தடைபோட எண்ணும்
அறிவுக்குப் பெயர்
ஆருக்குத் தெரியும்…

கார்த்திகை வந்தால்
நித்திரை மறந்து
உயிர்ப் பிச்சை கேட்டுப்
புத்தரை வேண்டி
இருட்டுக்குப் பயந்து
இருந்த காலம் …
நினைவினில் இருக்கா?
எப்படி மறப்பது
அந்தக் காலமதை…

குப்பி விளக்கின்
குருட்டு வெளிச்சத்தில்
தேங்காய் உடைத்துத்
தெருவிளக்கேற்றினோம்
எதற்காய் என்று
தெரியுமா உமக்கு……
எண்ணெய்க்கு அப்போ
தடை போட்டுப் பார்த்தீர் …
எரியும் நினைவுக்கு இப்போ
தடை போட நினைத்தீர்…
தவறு ஏதோ
உனதில்லைப் போய்யா…

வரலாறை மாற்றி
எழுதிட நினைத்தால்
தாங்குமா தேசம்..
வரலாறாய் எமக்குள்
வாழ்பவர் நினைவை
தடை போட
உம்மால் எப்படி முடியும் …

இருட்டைக் கிழித்து
ஒளியைத் தந்த
சூரியப் புதல்வர்
அவர்களப்பா…
விளக்கேற்றா விட்டால்
அழியவா போறார்…
வாழும் எம்மை
அடியோடு அழித்து…
வாசல் தோறும்
பிணமாக்கிப் போட்டாலும்
அழியாது அவர்கள்
நினைவுகள் மட்டும்

சூரியனை மறைக்க
சுண்டெலி நினைத்தால்
தவறேயில்லைச்
சுண்டெலி மீது…
சூரியன் அவர்கள்
சுண்டெலி நீங்கள்…
விளக்கேற்ற மட்டும்
தடுப்பதைப் பார்த்தால்
உங்கள் முயற்சியும்
தவறில்லைப் போய்யா…

விளக்கேற்றத் தடையாம்…
கோயில் மணியோசை தடையாம்
விழுந்து வணங்கிய
துயில் பூமி கூடப்
போகவும் தடையாம்…
சரியய்யா….
எல்லாம் சரி
ஆனால்..
எங்கள் நினைவில்
என்றும் நிலைத்திருக்கும்
அவர் நினைவுக்குத்
தடைபோட ஆரால் முடியும்…

நினைத்துப் பார்த்தேன்
அழுவதா சிரிப்பதா…
நிலை கெட்ட உங்கள்
அறிவுப் பசிக்கு..
விளக்கேற்ற வேண்டும்
கடவுள் இல்லாத…
நாத்திகன் மனதிலும்
கடவுளின் நினைப்பு
நிலைத்தே இருக்குமாம்
அதுபோலவே….
விளக்கேற்றா விட்டாலும்
உங்கள் நினைவிலும்
நிலைத்தேயிருப்பர்
இவர்கள்….

தடை போட நினைத்த
அறிவாளிக் கூட்டமே…
விளக்கேற்றத் தடையாமெனச்
சொல்லும் போதே
எமக்கு முன்னரே
அவர்களை நினைப்பது
ஆரெனச் சொன்னால்
அகிலமே கூடிச்
சிரிக்காதா சொல்லும்….
விளக்கேற்றத் தடையெனச்
சொல்லுங்கள் நீங்களே.

றோய் மதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here