மாவீரர் பணிமனை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமது பணிமனையில் கோவிட் 19 உள்ளிருப்பு நியமங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்களுடன் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வை இன்று 21.11.2020 சனிக்கிழமை நடாத்தியிருந்தது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை லெப். தமிழ்ப்பிரியாவின் சகோதரர் ஏற்றி வைத்திருந்தார்.
மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தை லெப். கானத்தரசியின் சகோதரர் செய்ய அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர்களுக்கு உரித்துடையோர் சுடர் வணக்கத்தையும், மலர்வணக்கத்தையும் செய்திருந்தனர்.
தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போன்று மாவீரர்களை பெற்றெடுத்தவர்களை மதிப்பளிக்கின்ற நிகழ்வு அனைவரோடு செய்யமுடியாததொரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாலும் கோவிட் 19 அதிகமாக பெருகிவருகின்ற காரணத்தால் ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது சுயபாதுகாப்பைப் பேணவேண்டிய நிலையாலும் அனைவரையும் அழைத்து மதிப்பளிப்பு நிகழ்வை செய்ய முடியாததொரு நிலை ஏற்பட்டதையும் இந்த ஆண்டு பிரான்சிற்கு வருகை தந்திருந்த மாவீரர் குடும்பங்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிலும், உப கட்டமைப்புகளிலும் பணியாற்றுகின்ற மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் கலந்து கொண்டதையும் இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய மாவீரர்நாள் ஏற்பாடு பற்றியும், இப்புனிதர்களின் திருநாளில் வீடுகளில் இருந்து கொண்டே மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் பொதுப்படம் செய்யப்பட்டு வழங்கப்படுவதாகவும், பாரிசின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லத்திலும், லெப். சங்கர் நினைவுக்கல்லின் முன்பாகவும் மட்டுப்படுத்தப்பட்ட மக்களோடு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என்பதோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையிடம் இதுவரை உள்ள மாவீரர் திருவுருவப்படத்திற்கு இந்நாளில் பொது மண்டபம் ஒன்றில் ஈகைச்சுடர் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் (30பேருடன் ) ஏற்றிவைக்கப்படவுள்ளது என்பதையும் இந்த பேரிடர் காலத்தில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக எமது மக்கள் நடந்து கொள்ளவேண்டும். இன்று இந்த மண்ணில் அநியாயமாக ஒவ்வொரு நாளிலும் கொடிய நோய்க்கு மக்கள் ஆளாக்கப்பட்டு சாவடைகின்ற செய்தியானது தமிழர்களாகிய எங்களுக்கு வேதனையைத் தருகிறது. அதில் தமிழர்களும் சாவடைந்து போவதும் நோய்க்கு ஆளாக்கப்பட்டு நிற்பதும் மிகப்பெரும் வேதனையாகவுள்ளது என்பதோடு. பிரான்சில் எமது மாவீரர்நாளினை செய்வதற்கு பிரெஞ்சு மக்களும் பல அரசியல் வாதிகளும் மனிதநேயத்தோடு தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இங்கு வாழும் மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உரித்துடையோர் நெஞ்சங்களில் தமது பிள்ளைகளை உறவுகளை நினைத்து ஒருநாள் வணக்கம் செலுத்த உரிமம் கொடுத்திருக்கின்றவேளை தாயகத்திலே வெளிவருகின்ற நாளிதழ் ஒன்று பிரான்சில் மாவீரர்நாளுக்குத் தடை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கொட்டெழுத்தில் சிவப்பு எழுத்தில் வெளியிட்டிருப்பதானது மிகவும் வேதனையைத் தருகின்றது என்றும் இவ்வாறு உண்மைக்கு புறம்பாக பொறுப்பற்ற செய்தியை போட்டிருப்பது ஈழம் என்றதொரு தேசம் அமைய தம்இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களை நினைவுகூரும் மாவீரர்களை களங்கம் செய்யும் வகையில் ஈழம் என்ற பெயரைக்கொண்ட நாளிதழ் இவ்வாறு எழுதியிருப்பது இரட்டிப்பு வேதனையைத் தருகின்றது என்பதையும் கூறியிருந்தனர். வந்திருந்த மாவீரர் உறவுகள் சிறிய நினைவுப் பொருள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இதில் சில மாவீரர்களுடைய உறவுகள் தமது மாவீரர்கள் பற்றிய நினைவுகளைத் தெரிவித்திருந்தனர். இளையோர்கள் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என்ற தாரக மந்திரத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.