கனகபுரம், முழங்காவில் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்களை நினைவேந்தக் கூடாது என்று சி.சிறிதரன் எம்.பி. உள்ளிட்டோருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று (20) வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று காலை சென்ற கிளிநொச்சி காவல் நிலையத்தின் காவல்துறைப் பொறுப்பதிகாரி நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கும் இன்று கிளிநொச்சி காவல்துறையினரால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் ஏறாவூர் நீதி மன்றிலும் குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மாவீரர் தினத்தை நினைவேந்துவதற்கு ஏறாவூர் காவல்துறையினரால் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவல்துறையினரால் மேற்படி தடையுத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் உட்பட அவர் சார்ந்தவர்கள், அமைப்பின் பிரதிநிதிகள் எவரும் மாவீரர் தினத்தை மட்டக்களப்பில் நினைவேந்த முடியாத வகையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.