யாழில் மாவீரர் நாள் தடைகோரிய மனுக்கள் ஒத்திவைப்பு!

0
186

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றுகள் ஒத்திவைத்துள்ளன.

மல்லாகம் நீதிமன்றம்,

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“ மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்க வேண்டும்” என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. எதிர்மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு அழைக்கப்பட்ட போது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான 6 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

“காவல்துறையினரின் விண்ணப்பத்தில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் காவல்துறையினர் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.

பருத்தித்துறை நீதிமன்றம்,

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தத் தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 காவல்துறை நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வோருவர் உட்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன. இந்த மனு அழைக்கப்பட்ட போது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி வி.திருக்குமரன், சந்திரசேகரம், செலஸ்ரின் உள்ளிட்ட 6 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மன்றுரையை இங்கும் சட்டத்தரணிகள் மன்றுரைத்திருந்தனர்.

(உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here