பிரான்சில் காவல்துறையின் படங்களை பிரசுரிப்பதை குற்றமாக்க விரைவில் சட்டம்!

0
321

பிரான்ஸில் காவல்துறையினரின் படங்களை முகம் தெரியக்கூடியவாறு வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சட்டம் விரைவில் வரவிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் நடக்கும் காவல்துறையினரின் நடவடிக்கைகளைப் படம் எடுத்து அவற்றை ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்கள் மற்றும் இணையத்திலும் பிரசுரிப்பதைக் குற்றமாகும் இந்தப் புதிய சட்ட மூலத்தை பிரெஞ்சு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

உள்ளூர் காவல்துறையினருக்கு ஆயுத பலத்தை அதிகரிக்கவும், அவர்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான அதிகாரங்களைக் கூட்டுவதற்கும் இந்தப் புதிய சட்டம் அனுமதிக்கின்றது.

தீவிரமாக குற்றங்கள் இடம்பெறும் பகுதிகளை ட்ரோன்கள் (surveillance drones) மூலம் வான் வழியாகக் கண்காணிப்பதற்கும் அது பொலீஸாருக்கு அதிகாரங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

“Sécurité global” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரது முகத்தை தெளிவற்றதாக மாற்றாமல் (blurred vision) காவல்துறையினரின் 45 ஆயிரம் ஈரோக்கள் அபராதத்துடன் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

காவல்துறையின் நடவடிக்கைகளைப் படம் எடுப்பதை தடைசெய்கின்ற இப் புதிய சட்டமூலத்துக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

ஊடகச் சுதந்திரத்தையும் தகவல் அறியும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் சர்ச்சைக்குரிய இச் சட்டத்தை நாட்டின் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக தொழிற் சங்கங்கள் கண்டித்துவருகின்றன.

சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போதும் ஆர்ப்பாட்டங்களை அடக்கும் போதும் பொலீஸார் மிக மோசமாக மனித உரிமைகளை மீறிவருகின்றனர் என்று குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலைமையில் இந்தப் புதிய சட்டம் அத்தகைய மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பளிக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் அஞ்சுகின்றன.

பாரிஸில் சட்டமூலம் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்ற நாடாளுமன்றத்துக்கு வெளியே நுற்றுக்கணக்கான ஊடகவியலாளர் களும் படப்பிடிப்பாளர்களும் ஒன்று திரண்டு கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் “பிரான்ஸ் ரெலிவிஷன்” படப்பிடிப்பாளர்கள் உட்பட முப்பது பேர் சுகாதார விதிகளை மீறியதாகக் கூறி காவல்துறையினரால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டனர்.

புதிய சட்டம் காவல்துறையினரைப் படம் எடுப்பதை தடுக்காது. அவர்களது அங்க அடையாளங்கள் தெரியும்படி படங்களைப் பகிரங்கப்படுத்துவதையே கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற உத்தியோகத்தர் ஒருவரது முகத்தை பகிரங்கமாகக் காட்டுவது அவரதும் அவரது குடும்பத்தவர்களதும் உயிர்களுக்கு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. உளவியல் ரீதியிலும் அவர்களைப் பாதிக்கிறது என்று சட்டத்தை நியாயப்படுத்தும் அரச தரப்பினர் வாதிடுகின்றனர்.

19-11-2020. குமாரதாஸன்
வியாழக்கிழமை. பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here