“கோவிட் 19” என்று மருத்துவப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பாக “சீன வைரஸ்” என அறியப்பட்ட கொரோனா வைரஸின் முதற் தொற்றாளர் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது.
சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்தில் 17 நவம்பர் 2019 அன்று அடையாளம் காணப்பட்ட 55 வயதான நபர் ஒருவரே நாட்டின் முதல் வைரஸ் நோயாளி(“patient zero”) என்று சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முதல் கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தினம் 8 டிசெம்பர், 2019 ஆகும்.
“சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்” இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
சீனாவின் முதல் நோயாளியின் வருகையைக் குறிக்கும் நவம்பர் 17 ஆம் திகதியை வைரஸின் “பிறந்த தினமாக” சமூகவலைத் தளங்களில் பலரும் நினைவு கூர்ந்துவருகின்றனர்.
போர்க்கால நிலைமையை ஒத்த பெரும் பேரிடருக்குள் முழு உலகையும் தள்ளிய ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெளிப்படுவதற்கு முன்பாகவே உலகின் வேறு பகுதிகளில் பரவியிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
கொரோனாவின் பிறப்பு எங்கே, எப்போது என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியவரவில்லை. ஆனால் முதலில் நோயாளிகள் மருத்துவ ரீதியில் அடையாளம் காணப்பட்ட இடமான சீனாவின் வுஹான் (Wuhan) அதன் பிறப்பிடமாகவும் முதல் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவம்பர் 17, 2019 அதன் பிறந்த நாளாகவும் குறிக்கப்பட்டுவருகிறது.
வைரஸ் வுஹானில் (Wuhan) உள்ள உயிருடன் விலங்குகளை விற்கும் சந்தையில் (Wet Market) இருந்து வந்ததா அல்லது அங்குள்ள பெரிய வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பாய்ந்ததா என்பதும் இன்னும் அறிவியல் மற்றும் மருத்துவரீதியில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.
சீனாவுக்கு வெளியே சில நாடுகளில் சாதாரண சுவாச நோய்களுக்காகச் சிகிச்சை பெற்றவர்களது பழைய மருத்துவ ஆய்வுகள் மீளப்பரிசோதிக்கப்பட்டபோது வைரஸ் பரவியதாக நம்பப்படும் காலப்பகுதிகள் குறித்துக் குழப்பமான தகவல்களை அவை வெளிப்படுத்தி உள்ளன.
இத்தாலியில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பரில் புற்றுநோயாளர்கள் சிலரில் செய்யப்பட்ட நுரையீரல் பரிசோதனைகள் அவர்களது உடலில் “கோவிட் வைரஸ்” எதிர்ப்புச் சக்தி தூண்டப்பட்டிருந்ததைக் காட்டி உள்ளன.
இத்தாலியின் தேசிய புற்றுநோய் நிலையம் இத்தகவலைத் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது
இத்தாலியில் முதலாவது தொற்றாளர் உத்தியோக ரீதியில் இனம் காணப்பட்டது கடந்த பெப்ரவரி22,2020 இல் ஆகும்.ஆனால் 2019 செப்ரம்பரிலேயே அங்கு வைரஸ் நுழைந்துவிட்டதா என்ற சந்தேகத்தைப் புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
இதே போன்று பிரான்ஸ் உட்பட வேறு சில நாடுகளிலும் சாதாரண நோயாளிகளிடம் செய்யப்பட்ட சுவாசப் பரிசோதனைகளின் பழைய பைல்கள் கிளறப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் வைரஸ் பரவத் தொடங்கிய காலப்பகுதி தொடர்பாகப் பல்வேறு ஐயங்களைக் கிளப்பி உள்ளன.
பிரான்ஸில் கடந்த சுமார் ஓராண்டு காலத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்கள்( 2,036,755) என்ற அளவை இன்று மாலை தாண்டிவிட்டது
என்ற தகவலை சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருக்கிறார்.மொத்தம் 46 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள் ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்
17-11-2020