தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய கரும்புலிகளின் நினைவு நாள் வரும் யூலை 5ஆம் நாளன்று இடம்பெறுகின்றது.
அன்றைய நாளில் களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றைத் தவிர்த்து கரும்புலி மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி நினைவுகூர்வதற்கு மானமுள்ள ஒவ்வொரு மறத்தமிழர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் அன்றைய நாளில் இலண்டனில் கோடை விழா கொண்டாட்ட நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகளில் வல்வை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) என்ற அமைப்பு இறங்கியிருப்பது மானமுள்ள ஒவ்வொரு மறத்தமிழர்களின் இதயங்களிலும் இடியாக வந்து வீழ்ந்துள்ளது.
கோடை விழா கொண்டாட்டங்களை எப்பொழுது வேண்டுமொன்றாலும் நடத்தலாம். ஆனால் கரும்புலிகள் நாளன்று அதனை நடாத்துவதற்கு என்ன தேவை ஏற்பட்டது? என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
கடந்த ஆண்டு கரும்புலிகள் நாளன்று தமிழீழ தாயகம் தோறும் பைலா நிகழ்வுகளை நடாத்தி மக்களை திசைதிருப்புவதற்கு சிங்களம் முற்பட்டது.
சிங்களம் திட்டமிட்டுச் செய்த அதே கைங்கரியத்தை மீள் அரங்கேற்றம் செய்வது போன்று இலண்டனில் கரும்புலிகள் நாளன்று கோடை விழாவை ஏன் வல்வை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்? என்பதே மானமுள்ள மறத்தமிழர்கள் பலரிடம் இன்று எழும் கேள்வியாகும்.
இதுபற்றி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் வினவிய பொழுது, அதற்குப் பதிலளித்த வல்வை நலன்புரிச் சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான கண்ணன் (ரகு) என்பவர், ‘‘கரும்புலிகள் நாளில் கோடை விழா நிகழ்வை நடாத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா?’’ என்று கூறியுள்ளார்.
இதே நிலைப்பாட்டுடன் வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஏனைய அமைப்பாளர்களும் இருக்கக்கூடாது என்பதே மானமுள்ள வல்வெட்டித்துறை மக்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதேநேரத்தில் வல்வை நலன்புரிச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகர்கள் சிலர் இதுவிடயத்தில் மௌனமாக இருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றது.
இதேபோன்று கரும்புலிகள் நாளில் யேர்மன் லாண்டோ நகரில் விளையாட்டு நிகழ்வு ஒன்றை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருப்பதும் மக்களிடையே பல கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.
கோடை விழா கொண்டாட்டங்களையோ, அன்றி விளையாட்டு விழாக்களையோ நடாத்துவதில் எந்தத் தவறும் கிடையாது.
புலம்பெயர் தமிழர் வாழ்வில் இவை தவிர்க்க முடியாதவை.
ஆனால் கரும்புலிகள் நாள் போன்ற தூய்மை பேணப்பட வேண்டிய வீரமறவர்களின் நினைவு நாட்களில் இவ்வாறான கொண்டாட்டங்களும், களியாட்டங்களும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
கரும்புலிகள் நாள் யூலை 5ஆம் நாளன்று இடம்பெறுவதை மறந்து விட்டோம் என்று கூறுவதோ, அன்றி விழா மைதானத்திற்கான கட்டணத்தை செலுத்தி விட்டோம் எனவே விழாவை வேறு நாளிற்கு மாற்றினால் பணம் விரயமாகும் என்று கூறுவதோ எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
அவ்வாறு கூறுவது எமது நல்வாழ்விற்காகத் தம்மையே ஆகுதியாக்கிய எமது இன்னுயிர் உறவுகளுக்கு நாம் இழைக்கும் பெரும் துரோகமாகும்.
அதேபோன்று களியாட்ட நிகழ்வு நடைபெறும் மைதானத்தில் கரும்புலிகளுக்கு நினைவாலயம் அமைப்பதாக அறிவிப்பதோ, அன்றி அங்கு நடைபெறும் போட்டிகளுக்கான வெற்றிக் கிண்ணம் கரும்புலிகளின் நினைவாக வழங்கப்படும் என்று அறிவிப்பதோ செய்யும் தவறை எந்த விதத்திலும் ஈடுசெய்வதாக அமைந்து விடாது.
இதனைப் புரிந்து கொண்டு கோடை விழா கொண்டாட்டத்தைப் பிறிதொரு நாளில் நடாத்துவதற்கு வல்வை நலன்புரிச் சங்கம் முன்வர வேண்டும் என்பதே மானமுள்ள ஒவ்வொரு வல்வை மக்களதும் எதிர்ப்பார்ப்பாகும்.
இதுவே மானமுள்ள ஒவ்வொரு மறத்தமிழரதும் அவாவுமாகும்.