இணையத்தளம் ஊடாக நடைபெறும் தீவிரவாத பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் கூட்டாக அறிவித்திருக்கின்றன.
தீவிரவாதிகளினால் பதிவிடப்படும் நிழல் படங்களும் செய்திகளும் உடனடியாக குறிப்பிட்ட வலைத் தளங்களில் இருந்து நீக்கப்படுவதற்கு ஐரோப்பிய ரீதியாகச் சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிஸில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய கோரத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
பரிஸ் -11 பந்தகன் கலையரங்கம் உட்பட உணவகங்களிலும் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் மிலேசத்தனமாகத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதனை நினைவு கூர்ந்த வேளையில் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
“நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஐரோப்பாவில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க பாடுபட வேண்டும், ஐரோப்பிய எல்லைகளை பலப்படுத்தி தீவிரவாதத்தை இல்லாதொழிக்க பாடுபடுவோம்” என்று ஐரோப்பிய நாடுகளின் உள் துறை அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் frontex அமைப்பு நடத்திய ஆய்வில் 22 வீதமான வதிவிட உரிமை அற்றவர்கள் எந்தவித பதிவுகளும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளுக்குள் நுழைவதாக தெரிவித்திருக்கின்றது.
பாரிஸ்,நீஸ், வியன்னா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் பிரான்ஸ் அதிபர் Emmanuel Macronபயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய எல்லைகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று இணையதளங்களில் தீவிரவாதிகளின் கருத்துக்கள் பரவாமல் தடுக்க அவற்றை உடனடியாக நீக்கும் சட்டம் இந்த வருட இறுதிக்குள் கொண்டுவரப்படும் என்றும் ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் காணொளி வழியாக நடத்திய கூட்டத்தில் அறிவித்திருக்கின்றார்.