சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சமூக விரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையொன்றின்போதே, நீதிபதி இளஞ்செழியன் இதனைத் தெரிவித்துள்ளார். போதைவஸ்து குற்றங்கள், அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றங்கள், சுடுபடைக் கலன் சட்டத்தின் கீழான குற்றங்கள், வீதி வாள்வெட்டுக்கள், கோஷ்டி மோதல்கள், மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றங்கள் போன்ற குற்றங்கள் சமூக விரோதக் குற்றச்செயற்பாடுகளாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் சமூகத்தை அச்சுறுத்தி, சமூகத்தை சீரழிக்கின்ற இத்தகைய குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள பல நபர்கள், யாழ் மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களினால் சட்டப்படி பிணை வழங்க முடியாத நிலையில் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள். அதேபோன்று நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்டவர்களும் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள்.
இத்தகைய சந்தேக நபர்களுக்கு பிணை கோரும், பிணை மனுக்கள் யாழ் மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்சழியன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது, பிணை வழங்கும் நடைமுறை குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். போதை வஸ்துக் குற்றம், சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுக்களில் சந்தேக நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தில் மட்டுமே, பிணை வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் பரிந்துரைத்திருக்கின்றது.
சமூகத்தில் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதுடன், சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்காகவும், சமூகவிரோதக் குற்றங்களைப் புரிகின்ற சந்தேக நபர்களுக்கு மேல் நீpதிமன்ற நீதிபதி தற்துணிவின் அடிப்படையிலும், விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையிலும் மட்டுமே பிணை வழங்க முடியும் என்றும் சட்டம் கூறுகின்றது. சமூக விரோதக் குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் சமூகத்தில் கிளர்ச்சி எழுகின்ற நிலையிலும் பிணை வழங்கப்படக் கூடாது என பிணை வழங்கும் சட்டத்தின் 14 ஆம் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நிலைமை யாழ்ப்பாணத்தில் இப்போது ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டியது நீதிபதிகளின் கடமையாகும். எனவே, யாழ்ப்பாணத்தில் சமூக விதோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நீதிமன்றில் இலகுவில் பிணை கிடையாது. சில வேளைகளில் பிணை அறவே கிடையாமலும் போகலாம். எவ்வளவு காலமாக இருந்தாலும் சமூகவிரோதக் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு பூரணமாக முடிவடையும் வரையில், விளக்கமறியல் உத்தரவில் மறியற்சாலையில் தடுத்து வைத்தே அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு உண்டு என தெரிவித்துள்ள நீதிபதி, சமூக விரோதக் குற்றம் செய்பவர்கள் வெளியில் நடமாடினால், சமூகம் நிம்மதியாக இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சமூகவிரோதக் குற்றச் செயற்பாடுகளுக்காகக் கைது செய்யப்பட்ட நபர்களின் தாய் தந்தையர், நீதிமன்றப் படிகளில் கண்கலங்கிய வண்ணம் இருக்கும் காட்சி வருந்தத்தக்கது. இருப்பினும் இவர்களை பிணையில் விட்டால், வெளியில் சமூகத்தில் பலர் கண்ணீர் விடுகின்ற அவலத்தைக் காண வேண்டிய சூழல் இருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூகவிரோதக் குற்றச் சந்தேக நபர்களுக்கு பிணை கிடையாது என்ற எச்சரிக்கையானது,
இனிமேல் குற்றம் செய்யத் துணிபவர்களுக்கு மட்டுமல்ல, சமூக விரோதக் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற தாய் தந்தையருக்கும் மிகவும் முக்கியமானது எனவும் நீதிபதி கூறியுள்ளார். தெரிந்து கொண்டே தப்பு செய்வதென்பது குற்றமாகும். அது தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.. தெரியாமல் செய்வது தவறு. அது திருத்தப்பட வேண்டும். குற்றத்திற்கும், தவறுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சட்டரீதியாகப் பிரித்தறிந்து, பிணை மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்படும். சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு, பிணை வழங்குவதும், மறுப்பதும் மேல் நீதிமன்ற நீதிபதியின் தற்துணிவு அதிகாரத்திற்கு உட்பட்டது என்று சட்டம் கூறுகின்றது.
எனவே, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்ற இந்த அறிவிப்பு தற்சமயம் சிறையில்வாடும் நபர்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல. இனிமேல், சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கின்ற நபர்களுக்கான ஒரு முன்னெச்சரிக்கையுமாகும் என்றும் அவர் மேலும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.