பகுதி நேர வேலை இழப்பில் உள்ளோரது வருட விடுமுறையில் கை வையாதீர்கள்!

0
581

பகுதி நேர வேலை இழப்பில் உள்ளோரது வருட விடுமுறையில் கை வையாதீர்கள்! தொழிற்சங்கத் தரப்பில் கடும் எதிர்ப்பு

பகுதிநேர வேலை இழப்பை (chômage partiel) சந்தித்துள்ள பணியாளர்களது வழக்கமான சம்பளத்துடன் கூடிய கூடிய வருட விடுமுறை நாட்களில் (congés payés) எந்த மாற்றமும் செய்யக்கூடாது. முதலாளிமார் அதில் கைவைக்க முடியாது.

தொழில் இழப்பைக் காரணம் காட்டி தொழிலாளர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றான இந்த விடுமுறை நாட்களில் மாற்றங்களைச் செய்யும் முஸ்தீபுகளுக்கு பிரான்ஸின் முக்கிய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

பொது முடக்கத்தால் பணியிடங்கள் பல மூடப்பட்டு பணியாளர்கள் பகுதிநேர வேலை இழப்பில் (chômage partiel) உள்ளபோதிலும் அவர்களது வருடாந்த விடுமுறை நாட்கள் வழமை போலவே கணக்கிடப்பட்டு வருகின்றன.

மாதத்துக்கு இரண்டரை நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்னும் அடிப்படையில் தொழிலாளர் சட்டப்படி (code du travail) அவை கணக்கிடப்படுவது வழக்கம்.

வேலை இழப்பில் உள்ள ஒருவர் மீண்டும் தொழிலுக்கு திரும்பிய பிறகு வருட விடுமுறை நாட்களைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் லீவில் செல்வதற்கு விரும்பலாம். அது அவரது உரிமை. ஆனால் அத்தகைய விடுப்புகள் தங்களது தொழில் நடவடிக்கைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும் என்று தொழில் வழங்குநர்கள் வாதிடுகின்றனர்.இதனால் அதில் சில மாற்றங்களைச் செய்ய அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓர் ஊழியரது சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களை ஏன் பகுதி நேர வேலை இழப்புக் காலத்துக்குள் உள்ளடக்கிவிடக் கூடாது என்று முதலாளிகள் தரப்பில் கேள்வி எழுப்பப் படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தொழில் அமைச்சு, தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனங்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தொழிலாளர்களது அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய
உணர்வுபூர்வமான இந்த விவகாரத்தில் அரசு தலையிடாது என்றாலும் இருதரப்பினரும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸில் தற்சமயம் ஒருமாத கால பொது முடக்க கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. டிசெம்பரில் அது முடிவுக்கு வந்தால் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும். அச்சமயம் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக்காலப் பகுதியைக் கருதி தொழிலாளர்கள் விடுமுறைகளைப் பெற்றுக்கொண்டு வீடு செல்ல விரும்புவர். ஏற்கனவே பாதிக்கப்பட்டிக்கும் தொழிற்றுறைகள் இதனால் மேலும் ஸ்தம்பிதமடையும் என்று முதலாளிகள் அஞ்சுகின்றனர்.


13-11-2020 வெள்ளிக்கிழமை
குமாரதாஸன். பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here