லண்டன், ஜப்பான், நியூசிலாந்து போன்ற நாடுகளில் கல்வியுடன் வேலைவாய்ப்பு எனக் கூறி ஆட்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மிகக் கவனமாக இருக்குமாறு அமைச்சர் தலதா அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி லண்டன், நியூசிலாந்து, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வியுடன் வேலைவாய்ப்புகள் என விளம்பரப்படுத்தி ஆட்கடத்தல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். எழுத்து மூலமான அனுமதியின்றி இவ்வாறான விளம்பரங்கள் பிரசுரிக்க முடியாது.
இவ்வாறான விளம்பரங்களை பிரசுரித்து ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது பணியகத்தில் பதிவு செய்யாது விளம்பரங்களை பிரசுரிக்கும் 7 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கல்வியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது என்பது முற்றுமுழுதாக பொய்யான வாக்குறுதியாகும்.
கல்விக்காக தவிர வேலைவாய்ப்புக்காக யார் சென்றாலும் பணியகத்தில் பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும்.
கல்வி விசாவின் மூலமாகச் சென்று அங்கு பகுதிநேர தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்து இளைஞர், யுவதிகளுடன் அதிக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார்.