சவுதியில் பிரெஞ்சுத் தூதர் பங்குபற்றிய போர் நினைவு நிகழ்வில் குண்டுவெடிப்பு!

0
204

சவுதி அரேபியாவில் பிரெஞ்சு தூதர் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் சிலர் காயமடைந்துள்ளனர்.

ஜெட்டா நகரில் உள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான இடுகாடு ஒன்றிலேயே குண்டுத்தாக்குதல் நடந்திருக்கிறது.

முதலாவது உலகப் போரின் நிறைவைக் குறிக்கும் அஞ்சலி வைபவம் ஒன்று அந்த இடுகாட்டில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவுதி அரேபியாவுக்கான பிரான்ஸின் தூதர் மற்றும் பிரிட்டன், கிரேக்க நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அச்சமயத்திலேயே அங்கு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது என்ற தகவலை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

வெடிப்பினால் தூதர்களுக்கோ தூதரகப் பணியாளர்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தாக்குதலை கோழைத்தனமானது என்று பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது.

முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் தொடர்பான சர்ச்சைகளால் அரபு நாடுகளில் பிரெஞ்சுப் பிரஜைகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சவுதியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் பாதுகாவலர் அண்மையில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தமை தெரிந்ததே.

11-11-2020. – புதன்கிழமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here