“மைனஸ் 70 டிகிரியில்” பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர் அல்பேர்ட் பூர்லா (Albert Bourla) குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாகத் தடுப்பூசி மருந்துகள் சாதாரண குளிரூட்டிகளில் வைத்துப் பேணிப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால் Pfizer – BioNTech கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறைந்தது மைனஸ் 70 டிகிரி உறை குளிரில் (-70 degrees) இருபத்துநான்கு மணிநேரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்று Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கைக்குரியது என்று கருதப்படும் அந்தத் தடுப்பூசிக்கான உலகளாவிய கேள்வி மிக உச்ச அளவைத் தொட்டு நிற்கும் நிலையில் பாதுகாப்பானதும் தரம் வாய்ந்ததுமான விசேட உறை குளிரூட்டிகளில் (biomedical ultra-low temperature freezers) வைத்து அவற்றை உலகெங்கும் விநியோகிப்பது பெரும் சவாலான விடயமாகியிருக்கிறது.
மைனஸ் எழுபது பாகை செல்சியஸ் குளிரூட்டிகள் பொதுவாக ஆய்வு கூடங்களிலும் முக்கியமான மருத்துவமனைகளிலும் மாத்திரமே காணப்படும். எனவே கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக வைத்துப் பேணுவதற்கு சூட்கேஸ் போன்ற கையடக்கமான சிறிய உயர்ந்த தர குளிரூட்டிகள் அவசர தேவையாகி உள்ளன.
அத்தகைய குளிரூட்டிகளைத் துரித கதியில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் தொழில்நுட்ப நிபுணத்துவக் குழுமமான MECOTEC நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் தடுப்பூசி புட்டிகளைப் பேணி எடுத்துச் செல்லக்கூடிய நவீன ஆழ் குளிரூட்டி கொள்கலன்களைத் தயாரிக்கும் பணிகளை உடனேயே ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் சடுதியாகப் பெருந்தொகையில் அவ்வாறான குளிரூட்டிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தம்மிடம் இல்லை என்று வேறு சில தொழில் நிறுவனங்கள் கை விரித்துள்ளன.
விமானப் போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப் போயுள்ள நிலைமையில் உலகின் சகல பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்தை விரைவாக விநியோகிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மருந்து தயாராகி விட்டது என்ற அறிவிப்பு வெளியான கையோடு மில்லியன் கணக்கில் தடுப்பூசியை வாங்குவதற்காக உலக நாடுகள் பலவும் Pfizer நிறுவனத்துடன் உடன்படிக்கைகளைச் செய்யத்தொடங்கிவிட்டன.
ஜரோப்பிய ஒன்றியம் முதற்கட்டமாக 300 மில்லியன் தடுப்பூசிப் புட்டிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளது என்ற தகவலை அதன் தலைவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் மக்களுக்கான தடுப்பூசி கொள்வனவு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வைரஸின் இரண்டாவது அலை மோசமாகப் பரவிப் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமானதா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
கிடைக்கக் கூடிய தடுப்பூசி மருந்தை முதலில் முன்னுரிமை அடிப்படையில் யாருக்குப் பயன்படுத்துவது என்ற விடயமும் விவாதிக்கப்படுகிறது.
தடுப்பு மருந்து ஒன்று கிடைத்தால் அதனை முன்னுரிமை ஒழுங்கில் யார் யாருக்குப் பயன்படுத்துவது என்பது சுகாதார உயர் அதிகார சபையால் ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு இலக்காகி அவசர சிகிச்சைப்பிரிவுகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கே முதலில் தடுப்பூசி பயன்படுத்தப்படவேண்டும் என்று அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இருதய நோய்கள், நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அந்த முன்னுரிமைப்பட்டியலில் அடங்குவர்.
இவர்களை அடுத்து மருத்துவர்கள், தாதியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பிறகே ஏனையோருக்கு தடுப்பூசி கிடைக்கும்.
தற்போது வெளியாகி இருக்கும் தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாயமானதாக இருக்குமா?
இந்தத் கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பி உள்ளனர். தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
பொதுவாகத் தடுப்பூசிகள் குறித்து பிரான்ஸ் மக்களில் அரைப்பங்கினரிடம் நம்பகத்தன்மை கிடையாது என்பதை சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தி இருந்தது.
இந்த நிலைமையில் Pfizer தயாரிப்பான புதிய தடுப்பூசி தொடர்பான பல கேள்விகள் மருத்துவ உலகை நோக்கி எழுப்பப்படுகின்றன.
🔴 நோய் எதிர்ப்புத் தன்மைக்கு உடலைப் பயிற்றுவிக்கும் (train the immune system) இந்தத் தடுப்பூசி மூலம் கிடைக்கக் கூடிய வைரஸ் எதிர்ப்புச் சக்தி, எவ்வளவு காலத்துக்கு உடலைப் பாதுகாக்கும்.?
🔴 வயோதிபர்களுக்கும் குழந்தைகளுக்கும் அது உகந்ததா?
🔴 ஒருவருக்கு நோய் தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி பயனளிக்குமா?வைரஸ் ஒருவரில் இருந்து மற்றவருக்குத் தொற்றுவதை அது தடுக்குமா?
🔴 தடுப்பூசியின் உடனடி, நீண்டகால பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும்?
இவை போன்ற பல கேள்விகளுடனேயே புதிய தடுப்பு மருந்தின் வரவை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
10-11-2020. – குமாரதாஸன்
செவ்வாய்க்கிழமை. பாரிஸ்.