அமெரிக்க, ஜேர்மனி கூட்டு முயற்சியில் 90 வீதம் பலனளிக்கும் வைரஸ் தடுப்பூசி!

0
148

தொண்ணூறு வீதம் பலனளிக்கக் கூடிய நம்பிக்கையான வைரஸ் தடுப்பு மருந்து ஒன்று தயாராகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜெர்மனியின் BioNTech ஆகிய இரண்டு முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே உலகெங்கும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை இன்று வெளியிட்டுள்ளன.

“அறிவியல் மற்றும் மனிதகுல வரலாற்றில் இது ஒரு முக்கிய நாள்” என்று Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இரண்டும் இன்றைய நாளைக் குறிப்பிட்டுள்ளன.

உலகெங்கும் இதுவரை பத்து லட்சம் உயிர்களைப் பலிகொண்ட “கோவிட் 19” என்னும் கொடிய வைரஸுக்கு நம்பிக்கையான மருந்தொன்று கண்டுபிடிக்கப்படிருப்பதான இன்றைய செய்தியை பதவிவிலகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலில் தெரிவான புதிய அதிபர் ஜோ பைடெனும் வரவேற்றுள்ளனர். செய்தி வெளியான கையோடு உலகெங்கும் பங்குச் சந்தைகள் திடீரென உயர்ச்சி கண்டுள்ளன.

புதிய தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் மொத்தம் 43 ஆயிரத்து 500 நோயாளிகளில் மூன்று கட்டங்களாகப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான எத்தகைய விளைவுகளும் இன்றி தொண்ணூறு வீதம் அது பலனளிப்பது அந்தப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஆஜெந்தீனா, பிறேசில், தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் பரீட்சார்த்தமாக தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டோர் 90 வீதம் குணமடைந்து உடல் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இந்தத் தடுப்பூசியை மூன்று வார இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு வலுவுக்கு உடலைப் பயிற்றுவிக்கும் வகையில்( train the immune system)வைரஸின் மரபணு மூலங்களின் ஒரு பகுதியை(virus’s genetic code) உடலினுள் செலுத்துதல் என்ற அடிப்படையைக் கொண்டதே இந்தத் தடுப்பூசி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸஸுக்கான தடுப்பு மருந்துகளை மனிதர்களில் பரிசோதிக்கும் மூன்றாவது சோதனைகளை உலகெங்கும் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மேற்கொண்டுவருகின்றன.

ஒரு மருந்தை பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்னரான Phase 3 எனப்படும் முக்கிய மூன்றாவது கட்டப் மனிதப் பரிசோதனையின் முடிவுகளையே Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. புதிய மருந்தை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிக்கு இனி அவை விண்ணப்பிக்க முடியும்.

வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகத் தாக்கிவருவதால் புதிய தடுப்பூசிக்கு மிக விரைவாக அனுமதியைப்பெற்று இந்த ஆண்டின் இறுதிக்குள் அதனைப் பாவனைக்கு விடும் பணிகளைத் தொடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே 200 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முன் பதிவு செய்துள்ளன. உலக நாடுகள் பலவும் இதே போன்று மில்லியன் கணக்கான தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே ஓடர்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கின்றன.

இந்த நிலையில் புதிய தடுப்பூசி வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.ஆயினும் தடுப்பூசியின் பக்க விளைவுகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு நாட்கள் செல்லலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி வந்துவிட்டது என்ற தகவல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுயபாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மக்கள் தட்டிக்கழித்து மீறி நடப்பதற்கு வாய்ப்பளித்தால் அதன் விளைவுகள் பேராபத்தாகிவிடும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

09-11-2020 – குமாரதாஸன்
திங்கள்கிழமை. பாரிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here