மேய்ப்பர்கள் வரும் வரை வெள்ளாடுகள் விழிப்பாக இருக்க வேண்டும் – ஈழமுரசு

0
261

eelamurazu-21சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோருக்கும் இடையில் கடந்த வாரம் இலண்டனில் பேச்சுவார்த்தையயான்று நடைபெற்று முடிந்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வோர் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது இது முதற்தடவையல்ல. 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் இவ்வாறான பல பேச்சுவார்த்தைகளைப் பலர் மேற்கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக 2009ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் இலண்டனில் அன்றைய சிறீலங்கா தூதுவர் நிகால் ஜெயசிங்கவுடன் ஹரோ பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர், தமிழர் நலவாழ்வு அமைப்பின் அப்போதைய பொறுப்பாளரும், பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளில் ஒருவருமான மருத்துவர் புவிநாதன் ஆகியோர் காதும் காதும் வைத்தாற்போன்று பேச்சுவார் த்தையயான்றை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் கே.பியின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொழும்புக்குப் பயணம் செய்து அன்றைய சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் இரகசியப் பேச்சுவார்த்தையயான்றில் ஈடுபட்டனர். இவர்களில் இருவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அப்பொழுது பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவராக விளங்கிய மருத்துவர் வேலாயுதப்பிள்ளை அருட்குமார். மற்றையவர் பிரித்தானிய தமிழர் பேரவையின் மற்றுமொரு முக்கிய உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருமான சார்ள்ஸ் அன்ரனிதாஸ்.

இதுபற்றி இவர்களின் தொடர்பாளராக விளங்கிய மருத்துவர் புவிநாதனுடன் அப்பொழுது ஈழமுரசு பத்திரிகையின் பிரித்தானிய செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய பொழுது, “சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது நாட்டில் உள்ள மக்களுக்கு ஏதாவது உதவியை எங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று மருத்துவர் புவிநாதன் அவர்கள் பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்பொழுது இதே பாணியிலான நியாயப்பாட்டை முன்வைத்தே சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இன்னுமொரு குழுவினர் மேற் கொண்டிருக்கின்றனர். அதாவது தாயகத்தில் உள்ள மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவே தாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஆட்கள் மாறியிருக்கின்றனரே தவிர, அதே காட்சிகள்தான் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டு வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்று தயா இடைக்காடர், மருத்துவர் புவிநாதன், மருத்துவர் அருட்குமார், சார்ள்ஸ் அன்ரனிதாஸ் போன்றவர்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகப் பாத்திரமேற்று பேச்சுவார்த்தை நாடகங்களில் நடி த்து முடித்தார்கள்.

இப்பொழுது இவர்களின் பாத்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய நடவடிக்கைப் பணிப்பாளர் சுரேன் சுரேந்திரன், நோர்வேயைச் சேர்ந்த மருத்துவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா ரமணன் ஆகியோர் ஏற்றிருக்கின்றனர்.

இதுபற்றிக் கருத்துக் கூறியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ ஆணையுடன் இச்சந்திப்பில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக, அல்லது தனது தனிப்பட்ட அபிலாசைகளைப் பிரதிபலிப்பவராக இச்சந்திப்பில் சுமந்திரன் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மருத்துவர் ரமணன் தங்கள் அமைப்பின் பிரதிநிதி அல்ல என்றும், எனினும் தங்களின் பிரதிநிதியாக அவரை வர்ணித்து உலகத் தமிழர் பேரவை பொய்ப் பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. அத்தோடு அங்கத்துவ அமைப்புக்கள் எதுவுமின்றித் தனிநபர்கள் ஒரு சிலரைப் உள்ளடக்கிய அமைப்பாகவே உலகத் தமிழர் பேரவை இயங்கி வருகின்றது என்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சுட்டிக் காட்டியிருக்கின்றது.

இங்கு ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது தமிழீழ தாயகத்தில் உள்ள மக்களினதோ, அன்றி வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களினதோ ஆணை ஏதும் இன்றியே சிறீல ங்கா அரசாங்கத்துடன் சுமந்திரன், சுரேந்திரன், ரமணன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான இன்னுமொரு பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இலண்டனிலும், சிங்கப் பூரிலும் நடைபெற்றிருந்தது. எனினும் இதுபற்றிய விபரங்கள் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருந்து வருகின்றன.

இதுபற்றி இலண்டனில் உள்ள தீபம் தொலைக்காட் சிக்கு செவ்வி வழங்கியிருக்கும் உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய நடவடிக்கைப் பணிப்பாளர் சுரேன் சுரேந்திரன், இராசதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது இரகசியம் பேணப்படுவது அவசியம் என்றும், இந்த வகையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் பேசிக் கொண்ட எல்லா விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கி ன்றார்.

முதலாவது இங்கு ஒரு விடயத்தை சுரேன் சுரேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அல்லது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் இரகசியக் காப்புடன் இராசதந்திர முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதற்கும், மக்களின் ஆணையில்லாத தனிநபர்கள் இரகசியக் காப்புடன் இராசதந்திர முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதற்குமான வேறுபாடுதான் அது. அதாவது முன்னையது மக்களின் நலன்களை மையமாகக் கொண்டது. மற்றையது ஒரு சில தனிநபர்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

எனவே, தாயக மக்களினதும், புலம்பெயர்ந்த மக்களினதும் ஆணையோ, அங்கீகாரமே இன்றி சிறீலங்கா அரசாங்கத்துடன் சுமந்திரன், சுரேந்திரன், ரமணன் போன்றவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதும், அதுபற்றிய விபரங்களை வெளியிடாது இவர்கள் இரகசியம் காப்பதும் இவர்களின் உள்நோக்கத்தையே உலகத் தமிழர்களிடம் பட்டவர்த்தனமாக்குகின்றது.

இது இவ்விதமிருக்க சுரேன் சுரேந்திரனுடன் இணைந்து தீபம் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கியிருக்கும் சுமந்திரன், இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான பன்னாட்டு விசாரணை முடிவுக்கு வந்து விட்டது என்றும், இனி நடக்க வேண்டியது விசாரணையின் பெறுபேறாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் முன்வைக்கும் பரிந்துரைகளை உள்நாட்டில் அமுல்படுத்துவது மட்டுமே என்றும் கூறியிருக்கின்றார்.

சுமந்திரன் அவர்கள் சட்டம் படித்த ஒரு சட்டத்தரணி. அவருக்கு ஆங்கில அறிவும் உண்டு. ஆனால் நடந்து முடிந்ததோ, பன்னாட்டு விசாரணையின் முதலாவது கட்டம். அதாவது வரும் செப்ரம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் வெளியிடப் போகும் அறிக்கை என்பது பன்னாட்டு விசாரணையின் முதலாவது கட்டம் நிறைவு பெற்றதையே குறியீடு செய்யுமே தவிர, பன்னாட்டு விசாரணையின் முடிவாக அது அமைந்து விடாது. அதன் அடுத்தபடியாக பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை நியமிப்பதற்கான பரிந்துரையையோ, அல்லது பன்னாட்டு நடுவர் மன்றம் (அதாவது சிறப்பு நீதிமன்றம்) ஒன்றை நியமிப்பதற்கான பரிந்துரையையோ ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு, அல்லது ஐ.நா. பொதுச் சபை க்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ள முடியும். தேவையேற்படின் இதுபற்றிய நீதிவிசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறுகூட ஐ.நா. பாதுகாப்புப் பேரவைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்ய முடியும். யதார்த்தம் இவ்விதம் இருக்கும்பொழுது பன்னாட்டு விசாரணை முடிந்து விட்டது என்று சுமந்திரன் அறிவித்திருப்பது அவர் உண்மையில் சட்டம் படித்துத்தான் சட்டத்தரணி ஆனாரா? அல்லது மக்களை முட்டாள்கள் என எண்ணி இவ்வாறு கூறியிருக்கின்றாரா? என்ற கேள்விக ளையே எழுப்பி நிற்கின்றது.

இவ்விடத்தில் ஒன்றை மட்டும் நாங்கள் கூறலாம். மேய்ப்பர்கள் இன்றிப் பாலைவனத்தில் அலைந்து திரியும் வெள்ளாடுகளைக் கண்டு ஓநாய்கள் அழுவது இன்று, நேற்று நடக்கும் ஒன்றல்ல. இது காலம் காலமாக நடைபெறுவது. தமிழீழ மக்களின் விடயத்திலும் இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. மேய்ப்பர்கள் இருக்கின்றார்கள் என்ற அச்சத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு மண்ணின் கீழ் தலையைப் புதைத்து மறைந்திருந்த ஓநாய்கள் எல்லாம் இப்பொழுது மெல்ல மெல்ல வெளியில் வரத்தொடங் கியுள்ளன. ஓநாய்களின் வருகை இத்தோடு முடியப் போவதில்லை. மேய்ப்பர்கள் வரும் வரை இது தொடரத்தான் போகின்றது. அதுவரை வெள்ளாடுகள் விழிப்பாக இருக்க வேண்டும். அல்லாது போனால் வெள்ளாடுகளை ஓநாய்கள் விழுங்கி விடும்.

ஆசிரியர் தலையங்கம்
– ஈழமுரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here