ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காத தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசின் பரிந்துரை மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என மாநில அரசுக்கான அதிகாரம் – அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை 2018-ல் தீர்மானம் நிறைவேற்றியது. இது ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கி தந்ததாக என் மீது குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறேன்; ஆனால் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் தமது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் பேரறிவாளன் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதலில் சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் சிபிஐ தரப்பு ஒரே வாதத்தை முன்வைத்ததால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பின்னர் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக கூடுதலாக எந்த தகவலையும் திரட்ட முடியவில்லை என கூறியது சிபிஐ.
இதனையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது; இந்த முடிவு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது.