புங்குடுதீவு மாணவி படுகொலை விசாரணை: ஒன்பது சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு!

0
133

vithija 4புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரையும் பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் கொழும்பில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற வித்யா படுகொலை மரணவிசாரணை வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார் இதற்கான அனுமதியை வழங்கினார்.

வித்யா படுகொலை வழக்கின் மரண விசார ணையை முன்னிட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

இக்கொலையின் பிரதான சந்தேக நபர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். நேற்றையதினம் வித்யா வின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி, சகோதரன் சிவலோகநாதன் நிசாந்தன் உட்பட ஏழு பேர் மரணவிசா ரணையின் போது காட்சியமளித்தனர். இவ்வேளையில் தயாரும், அவரது சகோதரரும் மயக்கமுற்றனர். இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயக்கமுற்ற வித்யாவின் தயாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன் சாட்சிக்கூட்டில் கதிரையில் அமர்ந்து அவர் சாட்சியமளித்தார். சுமார் அரை மணித்தியாலங்கள் வித்யாவின் தாய் சாட்சியமளித்தார். அதன் பின்னர் சாட்சி யமளித்த வித்யாவின் சகோதரர் சாட்சிய மளிக்கும்போது இரண்டு தடவைகள் மயக்கமுற்று வீழ்ந்தமை மீண்டும் நீதிமன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தனது சகோதரியின் சடலம் காணப்பட்ட நிலைமை குறித்து விளக்கமளிக்க முற்படுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது தடவையும் மயக்கமுற்றார். இதனைத் தொடர்ந்து அவரை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது.

இதனைவிட வித்தியாவின் உறவினரான கார்த்தி, சட்டவைத்திய அதிகாரி உ.மயூரன், புலனாய்வுப் பிரிவு அதிகாரி, முன்னாள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தற்போதைய பொறுப்ப திகாரி உட்பட 7 பேர் சாட்சியமளித்தனர்.

வித்தியாவின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை மற்றும் சந்தேகநபர்கள் 09 பேரிடமிருந்தும் பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் அறிக்கையை சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதேநேரம், வித்யாவின் சடலம் மீட்கப்பட்ட இடம் மற்றும் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்ட வீடுகளிலிருந்து பெறப்பட்ட தடயங்களை பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தடயங்கள் மற்றும் இரத்தமாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்குமாறும் நீதிபதி உத்தர விட்டார்.

அரசசட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு அமையவும் 09 சந்தேக நபர்களையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் கொழும்பில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

வழக்கு விசாரணையின்போது வித்யா சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவராசா, யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார், வெள்ளவத்தையில் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்ற விடயத்தில் பொலிஸாரின் விசாரணை குறித்த அறிக்கையைக் கோரியிருந்தார். இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அடுத்த தவணையில் அறிக்கையை சமர்பிப்பதாகவும் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. நேற்றைய வழக்கு விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதுவரை காலமும் சந்தேகநபர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் தடுத்துவைக் கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் கொழும்பில் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி கிடைத்திருப்பதாக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த வித்யா சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவராசா குறிப்பிட்டார். இந்தக் காலப் பகுதியில் மேலதிகமான தகவல்கள் ஏதும் தெரிந்தால் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சிங்கள சட்டத்தரணிகள்

இதேநேரம், நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது மூன்று பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தமை தொடர்பிலும் சட்டத்தரணி தவராசா சந்தேகம் வெளியிட் டுள்ளார்.

குறித்த மூன்று சட்டத்தரணிகளும் வாதாடுவதற்குத் தமது பெயர்களை வழங்கவில்லையென்றும், இவர்கள் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தவராசா கூறினார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சந்தேகநபர்கள் 9 பேரும் நேற்று மாலையே கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஜூலை 13ம் திகதி இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here