இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,185 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,144 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 4,399 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,244 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் கொரோன தொற்றுக்கு உள்ளானவர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் 67,000 பேரிற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
25,000 குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள யாரேனும் அததை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.