ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 16 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்ட பொதுச்சேவைக்கு இலக்கணமாக திகழ்ந்து தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர்.
தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றுவதுதான் தன் பணி என்று நின்று விடாது அதற்கு அப்பால் தான் வாழும் சமூகத்திற்காக அன்னை அர்ப்பணித்தார். அதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்று எடுத்துக்காட்டினார்.
1925ஆம் ஆண்டு பிறந்த அவர் அக்காலத்தில் அமெரிக்க மிசனறிமார் நடத்தி வந்த மல்லாகம் அமெரிக்க மிசன் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்தார்.
1946ஆம் ஆண்டு ஆசிரிய பணியில் இணைந்து கொண்டார்.
அதன் பின்னர் தமிழையும் சைவ சமயத்தையும் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார்.
யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.
பிற்காலத்தில் இவர் ‘சிவத்தமிழ்ச் செல்வி’, மற்றும் ‘துர்க்கா புரந்தரி’ என அழைக்கப்பட்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.
ஆலய வளாகத்தில் அனாதைச் சிறுமிகளுக்கென துர்க்கா மகளிர் இல்லம் என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவி சேவையாற்றி வந்தார். அத்துடன், ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதிபர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து தொண்டாற்றினார்.
ஈழத்தில் வாழ்ந்த ஒரு நடமாடும் தெய்வம் இறையடி சேர்ந்து இன்று 16 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரின் வாழ்வும் பணியும் தமிழ் இளையோருக்கு வழிகாட்டியாக அமையட்டும்.