கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால் வட மாகாண முதலமைச்சரும், அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் டக்லஸ் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
மாகாண சபை நடவடிக்கைக்கு மத்திய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக உள்ளதாக சபை விவாதத்தின்போது முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உரியமுறையில் பயன்படுத்தப்படாமையால், அதனை திறைச்சேரிக்கு மீள அனுப்புவது தொடர்பிலும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே இடம்பெற்ற அமைதியின்மையால் சபைக் கூட்டத்திலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.