சம்பந்தனைச் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் – புதுடில்லி வகுக்கும் வியூகங்களும் தமிழரின் நிலைமையும்.

0
108

கொழும்புக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்பட பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் இருவரும் பேசினார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் போம்பியோ கொழும்பில் தன்னுடைய சூறாவளி பயணத்தை முடித்துக்கொண்டு மாலைதீவு புறப்பட்ட வேளையில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பொம்பியோ கொழும்பில் தெரிவித்த கருத்துக்களும், சீன தரப்பிலிருந்து அதற்குக் கொடுக்கப்பட்ட பதிலடியும் ஊடகங்களின் கவனத்தை ஈர்ந்திருந்த நிலையில், சம்பந்தன் – கோபால் பாக்லே சந்திப்பு ஊடக கவனத்தை அதிகளவுக்குப் பெற்றுக்கொள்வில்லை.

இந்தச் சந்திப்பில் “புதிதாக” எதுவும் இல்லை என்பதும், இதன்பால் ஊடக கவனம் ஈர்க்கப்படாமைக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். “முக்கிய விடயங்கள் குறித்துப் பேசினோம். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்களை நான் தெளிவுபடுத்தினேன்” என வழமையான பாணியில் சந்திப்பு குறித்து சம்பந்தன்  ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருக்கின்றார்.

“தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்களை” இந்தியத் தரப்புக்கு சம்பந்தன் தெளிவுபடுத்தியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

ஒவ்வொரு சந்திப்பின்போதும் சம்பந்தன் இதனைக் கூறுவதும், “கவனத்திற்கொள்கின்றோம்” என்ற இந்தியத் தரப்பின் “ரெடிமேட்” பதிலுடன் சந்திப்பு முடிவடைவதும் வழமையானதுதான். “கவனத்தில் எடுத்து”  இந்தியத்  தரப்பு செயற்பட்டிருந்தால் அதனையே திரும்பச் சொல்ல வேண்டிய தேவை சம்பந்தனுக்கு ஏற்பட்டிருக்காது. சொல்வதற்கு மேலாக இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதுதான் இதன் அர்த்தம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கடந்த மாதம் இடம்பெற்ற ‘மெய்நிகர்’ சந்திப்பின்போது 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்ததை கூட்டமைப்பு வரவேற்றது. ஆனால், அதற்கான அழுத்தங்கள் எதனையும் கொடுப்பதற்கான இயலுமையுடன் புதுடில்லி இருப்பதாகத் தெரியவில்லை.

’13’ குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் கொழும்பு உறுதியாகத்தான் இருக்கின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

கொழும்புடனான நட்புறவு பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கே புதுடில்லி விரும்புகின்றது. அதனைவிட தமது அணுகுமுறை சிங்கள – பௌத்த தேசியவாதிகள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதிலும் புதுடில்லி அவதானமாக இருக்கின்றது. இலங்கை விவகாரத்தைக் கையாள்வதில் அது தமக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் புதுடில்லிக்கு இருக்கிறது.

இலங்கை விடயத்தில் உறுதியான – இறுக்கமான ஒரு அணுகுமுறை ஒன்றை முன்னெடுப்பதில் புதுடில்லி தடுமாறுவதற்கு இவைதான் காரணம்.

இப்போது, இந்தியா பேச நினைப்பவைகளை – அல்லது விரும்புபவைகளை அமெரிக்கா பேசியிருக்கின்றது. இலங்கையில் சீனாவுக்கு எதிராக இந்தியா தொடுக்க வேண்டிய யுத்தத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தொடுத்திருக்கின்றார்.

இலங்கை விவகாரத்தைக் கையாள முற்படும் மேற்கு நாடுகள் அனைத்தும் இந்தியாவின் சம்மதத்துடன்தான் கைவைக்கின்றன. இப்போது, சீனாவுக்கு எதிராக கொழும்பில் வைத்து பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் புதுடில்லியின் கருத்துக்கள்தான். அல்லது புதுடில்லி சொல்லவிரும்பும் கருத்துக்கள்தான். கொழும்பு வரமுன்னர் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் போம்பியோ சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

இலங்கையில் சீனா காலூன்றுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது இந்தியாதான். இருந்த போதிலும் இவ்விடயத்தில் தான் நேரடியாகப் பேசப்போய் கொழும்பினதும், சிங்களக் கடும்போக்குவாதிகளினதும் அதிருப்திக்கு ஆளாகக்கூடாது என்பதில் புதுடில்லி கவனமாகவே இருக்கின்றது. அதனால், அமெரிக்கா மூலமாக புதுடில்லி காய்களை நகர்த்தியிருப்பதாகவே தெரிகின்றது. 

கொழும்பில் அமெரிக்கா – சீன இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் பரபரப்பாக நடைபெறும் பின்னணியில் சம்பந்தனைச் சந்தித்து பேசியிக்கின்றார் இந்திய உயர் ஸ்தானிகர். சந்திப்பு இடம்பெற்ற இந்த நேரத்தின் பின்னணியில் ஏதாவது செய்தி இருந்திருக்கலாம். 

ஆனால், வழமைபோல “சொல்ல வேண்டியவைகளை” சொல்லியிருக்கின்றார் சம்பந்தன். இந்தியத் தரப்பும், “பார்க்கிறோம்” என்ற வழமையான பிரதிபலிப்பைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றது. அடுத்த முறை இருவரும் சந்தித்தாலும், இதேபோன்ற செய்திதான் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

இலங்கையை மையப்படுத்தி தீவிரமடைந்திருக்கும் வல்லரசுகளின் இந்த ஆதிக்கப் போட்டியை தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப்போகின்றது? அதற்கான உபாயங்கள் ஏதாவது எம்மிடம் உள்ளதா? அது குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஏதாவது தமிழ்க் கட்சிகளிடையே இடம்பெற்றிருக்கின்றதா ?

அல்லது, இந்தியா ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையுடன், தொடர்ந்தும் “சொல்லவேண்டியவைகளை அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம்” என வெறுமனே ஊடகங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகின்றோமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here