பலமான நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் ஏஜியன் கரையோரப் பகுதிகளிலும் (Aegean Coast) கிறிஸ் நாட்டின் சாமோஸ்(Samos) தீவிலும் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இரு நாடுகளையும் உலுக்கி இருக்கும் இந்த இயற்கைப் பேரிடரில் இதுவரை 19 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எழுநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.
ரிச்டர் அளவில் 7.0 எனப் பதிவாகிய இந்த நிலநடுக்கத்தை அடுத்து சாமோஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி ஆழிப்பேரலைகள் கிளம்பின என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நில அதிர்வு
எதேன்ஸ், அங்காரா ஆகிய நகரங்களின் கீழாக பூமிக்கு அடியில் சுமார் பத்துக் கிலோ மீற்றர் ஆழப்பகுதியில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க பூகோளவியல் சேவை அறிவித்திருக்கின்றது.
மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மீர் மாகாணத்தில் சுமார் இருபது கட்டடங்கள் வரை தரைமட்டமாகி உள்ளன. இரண்டாயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 709 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.70பேர் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கிறீஸின் சாமோஸ் தீவில் இளைஞனும் யுவதியுமாக இருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். 1904 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாமோஸ் தீவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கம் இது என்று அங்குள்ளோர் கூறுகின்றனர்.
1999 இலும் அதன் பிறகு கடந்த ஜனவரியிலும் துருக்கியை பலமான நிலநடுக்கங்கள் தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்தி இருந்தன.
இன்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் எதிரி நாடுகளான துருக்கியையும் கிறீஸையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் இரு நாட்டுத் தலைவர்களும் வேறுபாடுகளை மறந்து செயற்பட முன்வந்துள்ளனர்.
மத்தியதரைக் கடல் எல்லை ஆதிக்கம் தொடர்பில் கிறிஸ் மற்றும் துருக்கி இடையே அண்மைக்காலமாக உறவுகள் முறிவடைந்து பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகி இருந்தது.