மாவீரர் நாள் 2020 பற்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில்,
அன்புக்குரிய பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
எமது விடுதலைப் போரில் முதலாவது வித்தாக வீழ்ந்த லெப் சங்கரின் நாளை அடையாளமாகக் கொண்டு 1989 இல் இருந்து தொடர்ந்து நவம்பர் 27 எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நாளாக நினைவு கூர்ந்து வருகின்றோம். தாயகத்தில் 2008 வரை விடுதலைப் புலிகள் அமைப்பால் மிகவும் சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும், எழுச்சியாகவும் இந்நாள் நினைவு கூரப்பட்டு வந்தது. 2009 இல் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்தப் பட்ட பின் மாவீரர்நாள் தொடர்ந்து எத்தனையோ தடைகளை, பயமுறுத்தல்களை இனவாத சிறிலங்கா அரசு முன்னெடுத்த போதும் தாயகத்தில் எமது மக்களால் அந்த புனித நாள் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.
இன்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுப் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சிறிலங்காவின் இனவாத சிங்கள அரசாங்கம், சிங்கள மக்களுக்குத்தான் சிறிலங்கா என்னும் போக்கில் தமிழர்களை அந்நாட்டில் இருந்து துடைத்தெறியும் செயற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துவதோடு அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் மறுத்து வருகின்றது. அத்தோடு விடுதலைப் போராட்டங்களின் அடையாளங்கள், நினைவுகளை இல்லாதொழிக்கும் வகையில் தியாக தீபம் திலீபனின் நினைவை நினைவுகூரும் உரிமையைச் சிங்கள நீதித்துறையின் துணையுடன் ஒடுக்கியது. நவம்பர் 27 இல் வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 யும் , கோவிட் 19 தொற்றைக் காரணம்காட்டி நிறுத்தவும் , நீதித்துறை கொண்டு ஒடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தாயகத்தில் எமக்காக சாவடைந்தவர்களை நினைவு கூருவது மறுக்கப்படும் போது புலம்பெயர் மண்ணில் எம்மால் எடுக்கப்படும் நினைவுகள், நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படல்; வேண்டும்.
இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கோவிட்19 பேரிடர் உலக ஒழுங்கையே மாற்றும் அளவு வீரியம் கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு நாடும் தமது மக்களையும், பொருளாதாரத்தையும், இருப்பையும் தக்கவைப்பதற்கு தம்மாலான உச்சப்பாதுகாப்போடு வாழ்வியலை முன்னெடுகின்றது. இவ்வேளையில் நாமும் எமது பாதுகாப்போடு கூடிய இருப்பையும் வாழ்வியலையும் நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முன்னெடுத்தல் வேண்டும்.
அதன் அடிப்படையில் பிரான்சில் வழமைபோல் தமிழ்த் தேசிய மாவீரர் நாளை நினைவு கூருவதற்காக மண்டப நிகழ்வொழுங்கும், துயிலும் இல்லவணக்கத்திற்கான ஏற்பாடும், லெப் சங்கர் தூபிக்கான மதிப்பளிப்பு ஒழுங்குகளும் முழுமுயற்சியுடன் எம்மால் எடுக்கப்பட்டன ஆனால் 28.10.2020 புதன்கிழமை அன்று பிரான்சு அரச தலைவரால் வெளிவிடப்பட்ட சட்ட ஒழுங்குக்கு அமைவாக அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என்பதை எமது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
இந்நாட்டின் அரசால் எடுக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு நாம் மதிப்பளிப்பதோடு எமது மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வோம்;.
இன்றுள்ள சட்ட நிலைமைக்கு அமைவாக
ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் மாவீரர் பொதுப்படத்திற்கும், மாவீரர்களின் உறவினர், நண்பர்கள் அவர்களின் படங்களை வைத்தும் நெய்விளக்கேற்றி நினைவு கூருவோம்.
தமிழர் வர்தக மையங்களில் பொதுப்படம் வைத்து குறித்த நேரத்திற்கு நெய்விளக்கேற்றி நினைவு கூருவோம்.
நினைவுகூரும் நிகழ்வை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் தரவிறக்கம் செய்து பகிர்வதால் எமது வேணவாவை ஒன்று பட்டு உலகிற்கு தெரிவிப்போம்.
மணியோசை நேரம் 13 : 32 க்கும் , விளக்கேற்றும் நேரம் 13 : 35 க்கும் கூட்டாக தீபம் ஏற்றி அவர்கள் நினைவை உணர்வு பூர்வமாக நினைவுகூருவோம்
இதற்கான பங்குபற்றுதலை நாங்கள் ஒவ்வொருவரும் உறுதி செய்யும் போது, நாம் எம் மாவீரர்களை நினைவு கூருவதோடு, அவர்களுக்கான மதிப்பையும் வழங்கமுடியும். அத்தோடு சிறிலங்கா அரசால் எமது நினைவுகளை நினைவுகூர மறுக்கும் நிலைப்பாட்டையும், போராட்ட உணர்வை மறக்கச்செய்யும் முயற்ச்சியையும் முறியடிக்க முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.