அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நேற்று 1,021 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக உள்ளது. இதுவரை 2,28,625 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்தவாரம் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது