யாழ்ப்பாணத்தில் மதுப் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மது பயன்பாடு ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்திலும் பாரியளவில் மதுபானங்கள் அருந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு போர் நிறைவின் பின்னர் மது பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத் தலைவர் ஆர். ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் 762610 லீற்றர் பியர் வகைகள் நுகரப்பட்டுள்ளதுடன், 2013ம் ஆண்டில் 4056999 லீற்றராக உயர்வடைந்துள்ளது.
கலால் திணைக்களம் இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2013ம் ஆண்டில் வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதமாக உயர்வடைந்துள்ளது. திட்டமிட்ட வகையில் மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனால் பிரதேச இளைஞர்களின் சமூக கரிசனை பாரியளவில் மாற்றமடைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.