பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸில் (Nice) அமைந்துள்ள நொத்தடாம் தேவாலயம் (Notre-Dame basilica) அருகிலேயே நபர் ஒருவரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
பொதுமக்களைக் கண்டபடி கத்தியால் வெட்டிய நபர் பின்னர் பொலீஸார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களது விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் தேவாலயத்தின் காவலர் மற்றும் இரு பெண்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று முற்கொண்டு வெளியான செய்திகள் தெரிவித்தன.
கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் தெரிவித்தது.
தாக்குதல் நடைபெற்ற நகரின் மத்திய பகுதியைப் பொலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். அம்புலன்ஸ் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.