பிரான்சில் தியாகி பொன் சிவகுமார் அவர்களின் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் 2015 நிகழ்வு நேற்று (14.06.2015) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் St Denis Porte de Paris பகுதியில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது
இந்நிகழ்வில்; மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 27.09.2007 அன்று நாகர்கோவிலில்; வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ஆம் லெப்ரினன்ட் புரட்சியின் சகோதரர் ஏற்றிவைத்தார். மலர் வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து நிகழ்விற்கு தலைமைதாங்கிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களான பானுஜா மகேஸ்வரன், சாரா மதீந்திரன் ஆகியோர் வரவேற்புரையை தமிழிலும் பிரெஞ்சிலும் ஆற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
தொடர்ந்து, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களான ஆகாஷ், அர்ச்சுனன் ஆகியோர் தமிழிலும் பிரெஞ்சிலும் உரை நிகழ்த்தியதையடுத்து, செந்தனி தமிழ்ச்சோலை மாணவர்களின் ‘வல்வெட்டி மைந்தனே….” பாடலுக்கான எழுச்சி நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது.
காணொளியில் செயற்பாட்டாளர் ஒருவரின் சமகால உரை இடம்பெற்றதை அடுத்து, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினரான நிலோசன் சீராளன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் தமிழ் இளையோர் அமைப்பின் உருவாக்கம்பற்றியும் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் திரையில் காட்சிப்படுத்தலுடன் விளக்கமளித்தார்.
தொடர்ந்து செவ்ரொன் தமிழ்ச்சோலை மாணவிகளின் ‘பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…” பாடலுக்கான நடனம் சிறப்பாக அமைந்திருந்தது.
இடைவேளையைத் தொடர்ந்து, தாயகக் கலைஞர் அருள் – நிரோஸ் அவர்களின் எழுத்து – இயக்கத்தில் உருவான ‘காவோலை” மற்றும் பிரான்சு ஈழக்கலைஞர் இயக்குநர் என்.எஸ்.ஜனா அவர்களின் ‘ஏன் இங்கு வந்த நீ” ஆகிய இரண்டு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இரண்டும் எமது மக்களின் அவலங்களை கண்முன்னே நிறுத்தியிருந்தன. ஏன் தாயகத்திற்கே எம்மைக் கொண்டுசென்றிருந்தன என்று கூறும் அளவிற்கு மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து இயக்குநர் ஜனா மற்றும் ஈழத்தமிழர் திரைப்பட சங்க உறுப்பினர் ஆகியோர் தமது கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
எமது மக்களின் அவலங்களை வெளியில் கொண்டுவருவதற்கு சிறந்த சாதனமாக திரைப்படங்கள் உள்ளதாகவும் அங்கு கருத்துக்கூறப்பட்டது.
அடுத்து ஆதிபராசக்தி நாட்டியப் பள்ளிமாணவிகளின் ‘தாய்தின்ற மண்ணே…” பாடலுக்கான எழுச்சி நடனம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக்தின் சார்பில் சிறப்பு நகைச்சுவை நாடகம் ஒன்று மேடைஏற்றப்பட்டிருந்தது. புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் வேலைகளில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது பற்றியும் வேலைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் பற்றியும் குறித்த நாடகத்தில் சூசகமாக நடித்துக்காண்பிக்கப்பட்டது. இது அனைவரையும் கவர்ந்திருந்தது.
இதனையடுத்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயற்பாட்டாளர் போல் அவர்கள் பிரெஞ்சுமொழியில் தியாகி பொன்சிவகுமார் பற்றியும் ஏனையவிடயங்கள் பற்றியும் உரைநிகழ்த்தினார்.
தொடர்ந்து Asociation Respect de soi அமைப்பைச் சேர்ந்த கோபதி அவர்கள் பிரெஞ்சு மொழியில் மிகச் சிறப்பாக உதாரணக் கதையுடன் உரைநிகழ்த்தியிருந்தார். அன்பு, பயம், அமைதி, அகிம்சை ஆகிய நான்கு சொற்கள் ஒருமனிதனின் வாழ்விற்கு முக்கியமானவை. இவற்றை பின்பற்றிவாழ்ந்தால் நாம் சிறப்பாக வாழமுடியும் என்று அவர் கூறித் தனது உரையை நிறைவுசெய்தார்.
தொடர்ந்து, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களான ஆகாஷ், அருணன் ஆகியோர் தமிழிலும் பிரெஞ்சிலும் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட பரீட்சை தொடர்பான விளக்கத்தையும் இளையோர் அமைப்பினரின் நோக்கம்பற்றியும் இளையோர் அமைப்பில் இணைந்து செயற்பட தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்த அனுப்பிவைக்கவேண்டியது பெற்றோரின் கைகளியே உள்ளது எனவும் பிரெஞ்சிலும் தமிழிலும் கேட்டுநின்றதுடன், புலம்பெயர் தேசத்தில் அதிகமான பிள்ளைகளுக்கு தமிழ் வரலாறு தெரியாமல்உள்ளனர் அவர்களுக்கு பெற்றோர்தான் சொல்லிக்கொடுக்கவேண்டும். எங்களுடன் இணைந்தால் நாங்களும் சொல்லிக்கொடுப்போம் என்றும் கேட்கப்பட்டது. அத்துடன் எக்காரணம் கொண்டும் பிள்ளைகளுக்கு அடிக்கவேண்டாம் எனவும் அன்பாக வழிநடத்தவேண்டும் எனவும் இளையோர் அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அடுத்து பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட பிரெஞ்சு, வரலாறும் பொருளாதாரமும், கணிதம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டன.
மூன்று பாடங்களிலும் முதன்மைபெற்று அதிகளவான மதிப்பெண்களை பெற்று ஓள்னேசுபுவா 2 தமிழ்ச்சோலை மாணவி யுவராஜகுமார் கபீஷனா பெற்றுக்கொண்டார். அவர் இதுபற்றி தெரிவிக்கையில் தனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தான் மிக்கமகிழ்ச்சிகொள்வதாகவும் தெரிவித்தார்.
அடுத்து பரிஸ் 15 தமிழ்ச் சோலை மாணவி சோதிலிங்கம் சோபிதா பெற்றுக்கொண்டார்.
அதிகளவான மாணவர்கள் பங்குபற்றியமைக்கான பரிசினை கிளிச்சி தமிழ்ச்சோலையும் முதன்மைப் பெறுபேற்றை பெற்றமைக்கான பரிசினைஓள்னே சுபுவா 2 தமிழ்ச்சோலையும் பெற்றுக்கொண்டன.
நிறைவாக நன்றியுரையைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
ஊடகப் பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.