“கிழக்கு மாகாணத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொது மக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம்” என கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் தெரித்தார்.
அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்:
“கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 10 பேரும் அம்பாறையில் ஒருவருமாக மொத்தம் 28 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பேலியகொட மீன்சந்தையில் கொரோனா பரவியதையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தில்பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிருபிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 3பேரும் நிந்தவூரில் 1பெண்மணியும் பொத்துவிலில் 5பேருமாக 9பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
புதிதாக நேற்றிரவு மருதமுனையிலும் ஒருவர் தொற்றுக்கிலக்காகியுள்ளார்.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு மீன் பிடித் துறைமுகம் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு உள்ளுர் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியவில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
நிந்தவூர் பெண்மணி!
நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணி பேலியகொடசம்பவத்துடன் தொடர்புபட்டவரல்ல. ஆயின் தொற்று தொடர்பாக இவ்வாறு விளக்கமளித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற பெண்மணியின் சகோதரரான 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு மாலைதீவிலிருந்து வருகை தந்ததுடன் அவரை 2 வாரங்கள் வெலிகந்த வைத்தியசாலயில் தனிமைப்படுத்தி அதன்பிறகு பின்னர் மீண்டும் இரண்டு வாரங்கள் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருந்தார்.
இவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில் இவருக்கும் இவரது இரண்டு சகோதரிகளுக்கும் எம்மால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் இவருடைய சகோதரி ஒருவருக்கு பரிசோதனையின் போது கொரோனாவிற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சகோதரியின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருந்து நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையிலேயே இவருடைய சகோதரிக்கு பரிசோதனையில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் இது சில வேளைகளில் Post Possitve ஆக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அறிவித்தல்
இன்னும் பலர் சமுகத்துள் மறைந்துவாழ்ந்துவருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுவிடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
சுகாதாரத்துறை மட்டும் இதுவிடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். என்றார்.