மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை மீட்பதற்காக ஒட்டு மொத்த மட்டக்களப்பு சமூகமே கொழும்பில் ஒன்று கூடி அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
ஒரு வார காலத்திற்கு மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ஆளும் கட்சி சார்ந்தவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.