வைரஸ் நெருக்கடி நிர்வாகத் தவறுகள்.!

0
107

அரசுப் பிரமுகர்களது வதிவிடங்களில் பொலீஸ் குழுக்கள் திடீர் பரிசோதனை!சுகாதார அமைச்சர், முன்னாள் பிரதமர் உட்பட முக்கிய அரசுப்பிரமுகர்கள் சிலரது அலுவலகங்கள், வதிவிடங்களில் நேற்று திடீர் பொலீஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.அரச நிர்வாகம் கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆரம்பத்தில் இருந்து கையாண்ட விதம் குறித்து நடத்தப்பட்டுவரும் நீதிமன்ற விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.தற்போதைய சுகாதார அமைச்சர் Olivier Véran, முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப், முன்னாள் சுகாதார அமைச்சர் Agnès Buzyn, தற்போதைய சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் Jérôme Salomon, முன்னாள் அரசாங்கப் பேச்சாளர் Sibeth Ndiaye ஆகியோரது வதிவிடங்கள், பணிமனைகள் என்பவற்றிலேயே சோதனைகள் இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.பதவியில் உள்ள சுகாதார அமைச்சர் Olivier Véran, அவர்களது வதிவிடங்கள், பணிமனைகள் சோதனையிடப்பட்டி ருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதமர், அவர் மீது “முழு நம்பிக்கை” வெளியிட்டிருக்கிறார்.பிரான்ஸில் அரசாங்கப் பிரமுகர்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட குடியரசு நீதிமன்றத்தின் (La Cour de justice de la République) பணிப்பின் பேரிலேயே விசேட பொலீஸ் ஜொந்தாம் குழுக்கள் இன்றைய பரிசோதனைகளில் ஈடுபட்டன.வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலப்பகுதியில் இருந்து அரசு அதனைக் கையாண்ட விதம் குறித்து மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களது உறவினர்கள் உட்பட பொது மக்களிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகத்துக்குக் கிடைத்திருந்தன. அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் அமைச்சர்களுக்கு எதிரானவை என்று தெரிவிக்கப்படுகிறது.அரச நிர்வாகத்துக்கு எதிரான அந்த முறைப்பாடுகளில் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட மந்த நிலை, மாஸ்க் போன்ற தொற்றுத் தடுப்பு சுகாதாரப் பொருள்களுக்கு ஏற்பட்ட பெரும் பற்றாக்குறை போன்ற விடயங்களும் உள்ளடங்கி இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here