மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.
மன்னார்- பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443பேரும் பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தவிர்ந்த குறித்த கிராமங்களை சேர்ந்த ஏனையவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம், நாங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் மூன்றாவது நிலை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த முடிவுகளின் படி மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாங்கள் 24 மணி நேர முடக்க நிலையை இரண்டு கிராமங்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம்.
இன்றைய தினம் முழுமையாக அப்பிரதேசங்களில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பரிசோதனைகள் சுமூகமான முறையில் நிறைவடையுமாக இருந்தால் இன்று மாலை 6 மணியில் இருந்து மீண்டும் மக்களின் இயல்பான நிலைக்கு அக்கிராமங்களை வழங்க முடியும்.
அதேநேரத்தில் இதுவரை எமது பகுதியில் சமூக தொற்று இனங்காணப்படாது இருந்தால் கூட மக்கள் விழிர்ப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விழிர்ப்புணர்வு இல்லாத நிலையில் நாங்கள் இந்த அபாய நிலையை மேலும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.
மேலும் அரச அலுவலகங்கள் அனைத்தும் இயல்பான நிலையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் . எனவே பொய்யான தகவல்களை நம்பி அலுவலகத்துக்கு சமூகம் அழிப்பதை தவிர்க்க வேண்டாம். உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைத்து அரச ஊழியர்களும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.