அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.
கொரோனா – 19 தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில் இவ்வருட தேர்வு நடாத்தப்படவில்லை.
சுவிஸ் நாட்டில் நான்கு (4) தேர்வு நிலையங்களில் இசை, நடன, மிருதங்க பாடங்களிற்கென தரம் இரண்டு தொடக்கம் நட்டுவாங்கத் தேர்வுவரை நடைபெற்ற இத்தேர்விற்கு 450ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.
தேர்வு நடுவர்களாக தமிழ்க் கல்விச்சேவையின் பொறுப்பாளர்கள், தமிழ்க்கலை ஆசிரியர்கள், ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த இளம் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கடமையாற்றியிருந்தார்கள். தேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வு இம் மாத இறுதிப்பகுதியில் இருந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கலையினை ஒருங்கிணைப்பதற்காக அனைத்துலகத் தொடர்பகத்தின் பணிப்பில் தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் 2000ம் ஆண்டு முதுநிலை பேராசிரியர் அமரர்; கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் இவ்வருடம் இருபதாவது (20) ஆண்டினை நிறைவுசெய்திருக்கின்றது.