பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நுவாசிலே செக் என்னும் இடத்தில் கடந்த 03.10.2020 சனிக்கிழமை அன்று நடந்த துயரச் சம்பவத்தில் படுகொலைக்கு உள்ளான உறவுகளை நினைந்து வணக்கம்.!

0
71

வணக்க நிகழ்வு  நுவாசிலே செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நுவாசிலே செக் மாநகரசபை முதல்வர்  மற்றும் 
Ecole Bayard, Ecole Quatremaire, college René casson Féderation  de Basket ball  ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் 09.10.2020 வெள்ளிக்கிழமை 19.00 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரியாக 19.00 முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டுத்துறையினர் பகுதி பகுதியாகச் சென்று சுடர்களையும் ஏற்றி மலர்களால் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து தமிழ்ச்சங்க தலைவர் உறுப்பினர்கள் என பல்லின மக்கள் எந்த வேறுபாடுகளும் இன்றி மாநகரசபையின் ஒழுங்குக்கு அமைய தமது வணக்கத்தைச் செலுத்தினர். ஆரம்பிக்கும் நேரமே அனைத்து மக்களின் வரிசை ஒரு கிலோ மீற்றர் வரை  நின்றிருந்தனர்.

உள்ளே மைதானத்தில் இறந்தவர்களின் படங்களும், பள்ளியில் படிக்கும் போது அவர்கள் எடுத்துக்கொண்ட படங்கள், விளையாட்டு உடைகள் சுவர்களின் ஒட்டப்பட்டு இருந்தன. வந்தவர்கள் யாவரும் அவர்கள் நினைவாகவும், ஆறுதல் தரும் கருத்துக்களையும் எழுதி மெழுகுதிரிகள் பல நூறு ஏற்றிவைத்தனர். எங்கும் அமைதியான நிசப்தமும், கவலையுடனும், வேதனையுடன் இருந்தனர்.

இறந்தவர்களின் உறவையும், நண்பர்களையும், அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்கள் மற்றும் ஏனைய நாட்டுமக்கள் ஆறுதல் கூறியது நின்றிருந்த அனைவரின் கண்களில் கண்ணீரையும் மன நெகிழ்வையும் தந்திருந்தது. மிக அதிகமாக கவலையுடன் தனது வேதனைகளை மாநகரமுதல்வர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார் காரணம் இவர் முதலில் அந்த நகரபாடசாலையின் அதிபராக இருந்ததும் இறந்து போன குழந்தைகளில் இருவர் தனது அன்புக்குரியவர்கள் என்றும் தான் மடியில் தூக்கிவைத்து பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்றும் கூறியிருந்தார்.

விரைவில் இந்த குடும்பத்தில் அக்கறைகொண்டு தன்னால் முடிந்த உதவி செய்வேன் என்றும் அதேபோல இவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம், துயரம் இங்கு வாழும் தமிழர்கள் பலரை வேதனைப்படுத்தியுள்ளது என்றும் அவர்களுக்கான உடல் உள ஆரோக்கியத்துக்கானதொரு செயற்திட்டம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.

ஏற்பாட்டின் பிரகாரம் மாலை 19.00 மணிமுதல் 22.00 மணிவரை நடைபெற்றது ஏறக்குறைய இரண்டாயிரம் வரையிலான மக்கள் பல இடங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டிருந்தனர்;. தமிழர் கட்டமைப்புகளின் பிரதிநிதிகள், அநேகமான சங்க உறுப்பினர்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். இறந்தவர்களின் உடல் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர்களுக்கான சடங்கு செய்ய முடியவில்லை என்றும் அனைத்து விசாரணை முடிந்த பின்னர் சடங்கு அறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


தாயகத்தில் இனஅழிப்பு ஒருபுறம் அதிலிருந்து தப்பி புலத்திலே ஒரு சோதனையான சவாலான வாழ்வும், அதனை ஒருவாறு மற்றவர்கள் போன்று வேதனைகளைச் சாதனைகளாக்கி வாழ்ந்த போதும் இயற்கையின் கோபத்தால் ஏற்பட்ட உயிர்கொல்லி நோய்களிலிருந்து தப்ப முடியுமா? முடியாதா என்ற கவலைகள் ஒருபுறம் எல்லாவற்றிற்கும் மத்தியில் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஆறுதலுக்கான இடமும், நேரமும்,ஆற்றுகைப்படுத்தல் இன்றி எமது மக்கள் பலர் பல இன்னல்களை அநுபவித்தே ஆகின்றனர். இதனால் ஏற்படும் விரக்தி இறுதியில் வாழவேண்டி பிஞ்சுப்பூக்கள் வளரும்போதே கருகிப்போவதென்பது எவராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இவ்வாறு பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டு பல உயிர்களை பலிகொண்டு விட்டது. எனினும் நல்ல மனிதநேயம் கொண்டவர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் இன்னும் நாம் வாழ்கின்றோம் மனிதநேயம் எவ்வாறு எந்தவித இன மத நிற வேறுபாடுமின்றி வாழ்கின்றது என்பதை இன்றைய நிகழ்வு அனைவருக்கும் உணர்த்தியது என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here