முழுநாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்வது அரசாங்கத்துக்கு மிகவும் இலகுவான விடயமாகும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால், நாம் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மட்டும் தான் தற்போது ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளோம் எனவும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் நாம் ஊரடங்கைப் பிறப்பிக்காமல் இருக்கப் போவதுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம்.
மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்கைப் பிறப்பித்து எந்தவொரு பயனும் கிடையாது.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இந்த விடயத்தில், அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை. மாறாக சுகாதார ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டே கொரோனா விவகாரத்தை நாம் கையாண்டு வருகிறோம்.
நேற்று மட்டும் 6800 பிசிஆர். பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் நெருங்கிய அனைவருக்கும் பரிசோதனை செய்துள்ளோம்.
சமூகத்திலும் பரிசோதனைகளை செய்துள்ளோம். அடையாளம் காணப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அம்யுலன்ஸ் ஊடாக, மிகவும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்றுள்ளோம்.
கடந்த காலங்களில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் எமது நாடு ஒட்டுமொத்த உலகுக்கும் முன்னுதாரணமாக இருந்தது. இதேபோன்று, எதிர்காலத்திலும் நாம் செயற்படுவோம் என்பதை எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முழுநாட்டுக்கும் ஊரடங்கைப் பிறப்பிப்பது அரசாங்கத்துக்கு மிகவும் இலகுவான விடயமாகும். ஆனால், நாம் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில்தான் தற்போது ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளோம்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்கைப் பிறப்பித்து எந்தவொரு பயனும் கிடையாது.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் நாம் ஊரடங்கைப் பிறப்பிக்காமல் இருக்கப் போவதுமில்லை.
தற்போது பரவிவரும் வைரஸ் தொற்று தொடர்பாக ஆராய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் நாம் எந்தவொரு தகவலையும் மறைக்கவில்லை என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.