மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து துப்புரவு செய்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களாக காணப்படும் பகுதிகளுக்குள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அத்து மீறி நுழைந்துள்ள பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி காணிகளை பிடித்து துப்புரவு செய்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு நேற்றைய தினம் (06) தினம் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள், இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராமசேவையாளர், கரடியனாறு பொலிசார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியதோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தெய்அத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராமசேவையாளர், மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர் பொலிசார் இணைந்து நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, உங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி தருகிறோம் என்று கூறிய போதும் குறிப்பாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளராக வந்திருந்த அதிகாரி அவர்கள் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளுக்குள் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள் இதில் இருந்து வெளியேறுங்கள் நாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அம்பாறை மாவட்டத்திற்குள் காணி தருகிறோம் என்று கூறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாத காணி அபகரிப்பாளர்களில் ஒருவர் அந்த இடத்தில் இருந்து நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநருடன் தொலைபேசியில் பேசி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரிடம் தொலைபேசியை கொடுத்து ஆளுநருடன் கலந்துரையாட கூறினார்.
ஆளுநர் அவர்கள் கட்டாயம் குறித்த சிங்கள குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய காணி வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி வழங்குவதாக வலய முகாமையாளர் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.
பின்னர் அதற்கு இணங்க மறுப்பு தெரிவித்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் எங்களுக்கு இந்த மாவட்டத்தில் தான் காணி வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் குறித்த இடத்தில் இருந்து அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறி வந்துவிட்டனர்.
ஆனால் அரச அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் வெளியேறியதன் பின்னர் அங்கு இருந்த பலர் காணிகளை அளந்து பிரித்து அடைத்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதன் படி இன்றைய தினம் குறித்த பகுதிக்கு பொறுப்பான மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரை அவர்கள் அனுப்பி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் அவர் கலந்துரையாடியதன் பின்னர் காணி அபகரிப்பாளர்களை சந்தித்தும் பேசியிருந்தார்.
ஆனால் சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் முடியவில்லை.
இதற்கு பின்னால் அரசியல் நிகழ்சி நிரல் ஒன்று உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.