யாழ்ப்பாணத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான திடீர் சோதனை நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டது.
யாழ். மாவட்ட செய லக மோட்டார் போக்குவரத்துப் பிரிவும் யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின்போது 44 வாகனங்களுக்கு சுமார் 10 நாட்களுக்குள் திருத்த வேலைகளை மேற்கொண்டு மீள உறுதிப்படுத்துமாறு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ். மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் கோபாலப்பிள்ளை மதிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்தவாரத்தில் 74 வீதி விபத்துக்களில் 84 இறப்புக்கள் நடைபெற்றுள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலக போக்குவரத்துப் பிரிவு பொலிஸாருடன் இணைந்து முதற்கட்டமாக யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு சேவையில் ஈடுபட்டுவருகின்ற முச்சக்கர வண்டிகள் ஹயஸ்ரக வாகனங்கள் மற்றும் சிறியரக வான்கள் போன்றவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 34 ஆட்டோக்களை சோதனையிட்டபோது அவற்றுள் 17முச்சக்கர வண்டிகளுக்கு திருத்தவேலைகள் செய்ய வேண்டும் எனவும் 42 வான் மற்றும் சிறியரக வான்கள் சோதனையிட்டபோது அதில் 27 வாகனங்களை திருத்த வேலைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் 10 நாட்களுக்குள் திருத்தப்பட்டு யாழ்.மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பரிசோதகரிடம் வாரத்தின் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் காண்பித்து சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை பெற வேண்டும்.
மேலும் இத்தகைய சோதனை நட வடிக்கைகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது என மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் கோ.மதிவண்ணன் தெரிவித்தார்.