“மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவால் தலையிடவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது” என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கின்றார். “இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் எனவும், இது தொடர்பாக எமது ஜனாதிபதியினால் மட்டுமே தீர்மானம் எடுக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான காணொளி மூலமான மெய் நிகர் சந்திப்பு ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. “13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என அதன்போது இந்தியப் பிரதமர் மோடி அழுத்தமாகத் தெரிவித்திருந்ததையடுத்தே சரத் வீரசேகர போன்றவர்கள் இவ்வாறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள்.
“இலங்கை என்பது சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. இதில் வெளியாரின் தலையீடுகள் இருக்கக் கூடாது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்தியா பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றான விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கும் நிபந்தனையை இந்தியா நிறைவேற்றவில்லை. இதனால், அந்த ஒப்பந்தம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது” என்றும் சரத் வீரசேகர தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் கடற்படை அதிகாரியான சரத் வீரசேகர, அதிதீவிர சிங்க – பௌத்த நிலைப்பாட்டில் செயற்படும் ஒருவர். அத்துடன், மாகாண சபைகளே தேவையற்றவை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருபவர். சிங்கள அமைப்பு ஒன்றின் சார்பில் ஜெனீவாவுக்கு கிரமமாகச் சென்றுவரும் அவர், போர்க் குற்றங்கள் தொடர்பில் அங்கு முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எதிராகப் போராடுபவர். இராணுவத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துபவர். “வியத்மக” என்ற அமைப்பின் ஒரு தீவிர செயற்பாட்டாளர். அவரைத்தான் ஜனாதிபதி மாகாண சபைகள் அமைச்சராக நியமித்திருக்கின்றார்.
இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, இந்தியாவின் கருத்துக்களுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பது ஆச்சரியமானதல்ல. சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைத் தக்கவைப்பதற்கு இவ்வாறான அணுகுமுறை தேவை என்பது அவருடைய கணிப்பாக இருக்கலாம். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனையின் விருப்பு வாக்குகளில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். முதலாவது இடத்தில் வந்தவர் விமல் வீரசன்ச என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக வந்தவர் உதய கம்பன்பில. கொழும்பு மாவட்ட சிங்கள மக்கள் கூட இனவாதத்தைப் பேசும் அரசியல்வாதிகளுக்கே வாக்களிக்கின்றார்கள் என்பதை இந்த விருப்பு வாக்குகள் உணர்த்துகின்றன.
சிங்கள மக்களுக்கு இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதும், தாம் மட்டும் தான் சிங்கள மக்களின் காவலர்கள் எனக் காட்டிக்கொள்வதும்தான் இவர்களுடைய உபாயம். அதன் மூலமாகவே சிங்கள வாக்குகளை வளைத்துப்போட முடியும் என்பதை இவர்கள் அறிந்திருக்கின்றார்கள். சரத் வீரசேகர இப்போது அதனைத்தான் செய்கின்றார். மாகாண சபைகளுக்கு எதிரான கருத்தும், இந்தியாவுக்குச் சவால்விடுவதும் இதன் அம்சங்கள்தான்.
மாகாண சபைகளைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தில் இரண்டுவிதமான கருத்துக்கள் இருக்கின்றது என்பது வெளிப்படை. சரத் வீரசேகர போன்றவர்கள் மாகாண சபைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். வாசுதேவ நாயணக்கார போன்றவர்கள் மாகாண சபைகள் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரு தரப்பில் பலமான தரப்பாக இருப்பவர்களுடைய நிலைப்பாடுதான் நடைமுறைக்கு வரும் என சொல்லிவிட முடியுமா? இந்தக் கேள்வி பலமானதாக இருக்கின்றது.
அவ்வாறு நடைபெறக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது என்ற நிலையில்தான் இந்தியப் பிரதமர் மோடி தன்னுடைய பங்குக்கு காய் நகர்த்தியிருக்கின்றார். “13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்” என்ற மோடியின் கருத்து சிங்களத் தலைவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கின்றது. அதனால்தான் இப்போது சிங்கள – பௌத்தத்தின் காவலர்கள் எனத் தம்மைத்தாமே சொல்லிக்கொள்பவர்கள் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
“அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பன்மை இருப்பதால், மோடியின் கருத்துக்கு செவிமடுக்கத் தேவையில்லை” என பௌத்த பிக்கு ஒருவர் கூறியிருக்கின்றார். போராசிரியரான மெதகொட அபயதிஸ்ஸ தேரரே அவ்வாறு கூறியிருக்கின்றார்.
மெதகொட தேரர் ஒரு பேராசிரியராக இருந்தாலும், சாதாரண ஒரு இனவாதியாகவே சிந்திக்கின்றார். இலங்கை – இந்திய உடன்படிக்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஜே.ஆர்.ஜயவர்த்தன கைச்சாத்திட்ட போது பாராளுமன்றத்தில் அவருக்கு ஐந்தில் நான்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது தவிர்க்கமுடியாததாக இருந்தது.
13 ஆவது திருத்தம் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பலனாக உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை இல்லாதொழிப்பதென்றால் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்க முடியாது. அவ்வாறான ஒரு முடிவுக்கு இலங்கை அரசு சென்றுவிடலாம் என்ற ஒரு நிலையில்தான், மோடி தன்னுடைய “குரலை”க் காட்டியிருக்கின்றார்.
மோடியின் இந்த நகர்வு, கொழும்பைத் தடுமாற வைத்திருக்கின்றது. தற்போதைய அரசியலமைப்பு இருக்கும் வரையில்தான் ’13’ குறித்து இந்தியா பேச முடியும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கினால் தமக்கு ஏற்றவகையில் ’13’ ஐ மாற்றலாம் என்ற ஒரு சிந்தனை அரசின் ஒரு பகுதியினரிடம் இருந்தது. இலங்கை மீதான தமது பிடியைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு 13 தொடந்தும் இருப்பது அவசியம் என்பது இந்தியாவின் சிந்தனை என்பது மோடியின் கருத்துக்கள் மூலம் உறுதியாகியிருக்கின்றது.
2015 ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை ராஜபக்ஷக்கள் பகிரங்கமாகவே முன்வைத்திருந்தார்கள். இப்போது, தெளிவான ஒரு செய்தியை மோடி கொடுத்திருக்கின்றார். அதன் அர்த்தம் கொழும்புக்கு நிச்சயமாகப் புரியும். ‘பந்து’ இப்போது கொழும்பின் பக்கத்தில்தான் உள்ளது. சரத் வீரசேகராவோ ஏனைய சிங்களத் தேசியவாதிகளோ தமது வாக்குப் பலத்தைப் பாதுகாப்பதற்கு என்னத்தைச் சொன்னாலும், 13 ஐ அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்!