இந்த சமுதாயத்தின் முக்கிய பங்காளிகளாக பாடசாலை சமுகம் இருக்கின்றது.அதிலும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இதில் கூடிய பங்கு இருக்கின்றது.இன்றைக்கு எமது மண்ணில் தொடர்ந்து கேள்விப்படும் செய்திகள் சிறுமிகள், யுவதிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவது. போதைப்பொருள் பாவனை நடத்தை பிறழ்வுகள் கூறலாம். இந்தச் சமூக சீரழிவுகளை பாடசாலை சமூகத்தினால்தான் கட்டுப்படுத்தமுடியும் என கிளிநொச்சி வலயத்தின் அதிபர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு சமுக விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றியபோதே யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது மண்ணில் தொடர்ந்து கேள்விப்படும் செய்திகள் சிறுமிகள், யுவதிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவது.போதைப்பொருள் பாவனை நடத்தை பிறழ்வுகள் கூறலாம். இந்தச் சமூக சீரழிவுகளை பாடசாலை சமூகத்தினால்தான் கட்டுப்படுத்தமுடியும் இந்த விடயங்களை உற்றுநோக்கினால் இப்பொழுது அநேகமான சம்பவங்கள் அந்தந்த ஊர்க்காரர்களாலேயோ அல்லது உறவினர்களாலேயோ தான் செய்யப்படுகின்றது.
இதுவரையும் நமது சமுகத்தின் பண்பாட்டில் கேள்விப்படாத அளவுக்கு மிகவும் கொடூரமான சிந்தனை மனோநிலை இப்போதைய நம் சமூகத்துள் ஏற்பட்டுள்ளது. ஒரு விதமான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அது எம்மவர்களை வைத்தே நிகழ்த்தப்படுகின்றது.போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இதை எமது சமூகத்தை சேர்ந்த இளைய சமுதாயம் செய்யத்துணிகின்றது.
அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள் குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம்.ஆகவே மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்கவேண்டும்.
ஒரு காலத்தில் நாங்கள் பிரம்போடு திரியும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கங்களை கற்றுக்கொண்டோம்.ஆனால் இன்று அப்படியல்ல சட்டதிட்டங்கள் ஆசிரியர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.இன்றைக்கு மாணவர்கள் கைத்தொலைபேசிகளை மிகவும் சாதாரணமாக பாவிக்கின்றார்கள். சிலர் ஒன்றுக்கு இரண்டு தொலைபேசிகளையும் பாவிக்கின்றார்கள்.இதனூடாக இன்றைக்கு சமூக வலைத்தளங்களூடாக வெளிவரும் தகாதவைகளையும் மாணவர்கள் பார்க்கின்றார்கள். இது தொடர்பாக விழிப்புணர்வுடன் பாடசாலை சமூகம் இருக்கவேண்டியது இன்றைய காலத்தில் அவசியம். மாணவர்களை திசைதிருப்பக்கூடிய சமுதாய நல்லொழுக்க விடயங்கள் தொடர்பாக போட்டிகள், கலைநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து அதில் மாணவர்களை ஈடுபட செய்து நல்ல சமுதாயத்தின் முன்னோடியான விடயங்களில் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
எமது படலைகள் தட்டுப்படும் வரை காத்திராமல் முன்கூட்டியே சில பாதுகாப்பு விடயங்களை செய்யவேண்டும் என்றார்.