கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த 30ஆம் திகதி நடந்த பிரச்சார நிகழ்ச்சியின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சென்றிருந்தார். இதனால், டொனால்ட் ட்ரம்பும் (74) அவரது மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை மாளிகையில் இருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நேற்று முதல் லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேலதிக சிகிச்சைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வால்ட் ரேட் மருத்துவமனையை சென்றடைந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டாலும், அவரது அதிகாரங்கள் தொடர்ந்து அவரிடமே இருக்கும் எனவும், தனது பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.