அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவி டம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று விசேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தனர்.
அங்குணகொல பெலஸ்ஸ நகரில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வொன்றில் நாமல் ராஜபக் ஷவுடன் வந்த பாதுகாவலர் துப்பாக்கியுடன்
ஜனாதிபதியை நெருங்கியமை தொடர்பில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு வருமாறு நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 8.10 மணியளவில் கோட்டையில் உள்ள புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு வந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. யிடம் பிற்பகல் 1.30 மணி வரை விசாரணை இடம்பெற்றுள்ளது. சுமார் ஐந்து மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் பின்னர் நாமல் எம்.பி. விடுவிக்கப்பட்டார். இதன் போது விசேட வாக்கு மூலம் ஒன்றும் அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அங்குண கொல பெலஸ்ஸ சம்பவத்தின் பின்னர் பாதுகாவலர் எடுத்துச் சென்றது துப்பாக்கி அல்லவெனவும் அது தண்ணீர் போத்தல் எனவும் நாமல் எம்.பி. பிரசித்தமாக கூறிவந்த நிலையில் அது தொடர்பிலும் விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
குற்றவியல் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுகத் நாககமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கியை எடுத்துச் சென்ற இராணுவ கோப்பரல் அதற்கு உதவி புரியும் வகையில் கடமை தவறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர், சார்ஜன்ட் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் ன் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அங்குணகொல பெலஸ்ஸ சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.