வெள்ளை மாளிகையில் தரையிறங்கிய விசேட “வெள்ளைக் ஹெலிக்கொப்ரர்”!

0
343

அமெரிக்க அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் சமயத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லப்படும் காட்சிகளை உலக ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து இராணுவ மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படங்கள் இவை.

வோஷிங்டனில் அமைந்துள்ள வோல்ரர் றீட் தேசிய இராணுவ மருத்துவ நிலையத்தில்(Walter Reed National Military Medical Center) அவர் சில தினங்கள் தங்கி இருப்பார் என்று வெள்ளைமாளிகை செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை வெள்ளைமாளிகையின் தென்பகுதியில் தரை இறங்கிய அதிபருக்கான சிறப்புக் ஹெலிக்கொப்ரர் (உலங்குவானூர்தி) ஒன்று அதிபரை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றது.

அதிபர் கை அசைத்தவாறு நடந்து சென்றே ஹெலிக்கொப்ரரில் ஏறிச் சென்றார். இன்னமும் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் அவர் லேசான களைப்பு போன்ற அறிகுறிகளை அடுத்தே சிகிச்சைக்காக இடமாற்றப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு ஒருமாதம் இருக்கும் நிலையில் பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மருத்துவமனை சென்றிருக்கிறார். வரலாற்றில் இது முதல் சம்பவம் என்று குறிப்பிடப்படுகிறது.

“மரீன் வண்”(Marine One) எனப்படும் அமெரிக்க அதிபருக்கான சிறப்புக் கடற்படை வான் பிரிவுக் ஹெலிக்கொப்ரர்களே “வெள்ளை விமானங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. பெரும் நெருக்கடியான சமயங்களில் அல்லது நோய்வாய்ப்படும் போது அதிபரை அவசரமாக இடம்மாற்றும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான விசேட படைப்பிரிவு அது.

நவீன பல வசதிகள் கொண்ட இந்த விசேட ஹெலிக்கொப்டர்களின் மேற்புறப்பகுதி வெள்ளை நிறம் கொண்டிருப்பதாலேயே அவை “வெள்ளை விமானங்கள்” என அழைக்கப்படுகின்றன.

(படங்கள் :வெள்ளை மாளிகையில் இருந்து வெள்ளைக் ஹெலிக்கொப்ரரில் அதிபர் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள்)

03-10-2020
சனிக்கிழமை

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here