பாரிஸ் உட்பட நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழைக் காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் அறிக்கைகள் எதிர்வு கூறுகின்றன.
“அலெக்ஸ்” (tempête Alex) எனப் பெயரிடப்படும் கடும் புயல் காற்று வியாழன் இரவு நாட்டின் வடமேற்கு(Brittany) அத்திலாந்திக் கரையோரப்பகுதியைத் தாக்கியுள்ளது. மணிக்கு,186 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதில் Morbihan மாவட்டத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பகுதிகளில் காலநிலை அபாய அளவுக் குறியீட்டின் அதி உயர்ந்த சுட்டியான சிவப்பு எச்சரிக்கை(vigilance rouge) விடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கரையோரப்பகுதிகளுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புக் கருதி பாலர் முதல் பல்கலைக்கழகம் வரை சகல கல்விநிறுவனங்களும் அங்கு மூடப்பட்டிருக்கின்றன.
இந்த புயல் காற்றினால் உருவாகிய அடை மழை நாட்டின் கிழக்கு, தென் கிழக்கு மாவட்டங்களிலும் வெள்ள நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
Côte-d’Or , Saône-et-Loire , Ain , Rhône , Isère , Ardèche , Drôme , Hautes-Alpes , Vaucluse , Alpes-de-Haute-Provence, Var போன்ற பகுதிகளில் கடும் மழை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
02-10-2020
வெள்ளிக்கிழமை
குமாரதாஸன்.