மஹிந்த பயணித்த பாதையில் இன்று மைத்திரியும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அதிகார ஆசை வந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி
குற்றம்சாட்டியுள்ளது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயற்பட வேண்டாம். மோசடிகளை
உடனடியாக நிறுத்துமாறும் ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சி மற்றத்துடன் இந்த அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் தமது அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் எவ்வாறான வழிமுறைகளை கையாண்டதோ அதே வழிமுறைகளை இந்த அரசாங்கமும் கையாள்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைமைத்துவத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் அமைச்சுப்பதவிகளை லஞ்சமாக கொடுத்து உறுப்பினர்களை வாங்குகின்றார்.மைத்திரிக்கும் இன்று அதிகார ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்காகவே மஹிந்த கூட்டணியை தன் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கையாள்கின்றார். மஹிந்த அரசாங்கத்தில் மகிந்தவுடன் கைகோர்த்து நாட்டை நாசமாக்கிய அமைச்சர்கள் இன்று மைத்திரி-–ரணில் அரசாங்கத்திலும் கைகோர்த்துள்ளனர். ஆகவே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நூறு நாட்கள் மட்டுமே இந்த அரசாங்கம் ஆட்சியை நடத்த முடியும். அதுவரை காலமே மக்கள் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
ஆனால் மக்களின் வரப்பிரசாதத்தை மீறிய வகையில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது தொடர்பில் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அதேபோல் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதை அனைவரும் ஆதரிக்கிறனர். ஆனால் அதற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இவற்றை விடுத்து கட்சிகளின் அதிகாரப் போட்டியில் மக்களின் வரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கத்துக்கு நாம் எச்சரிக்கின்றோம்.
மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுபடவே மக்கள் மாற்று ஆட்சியை ஆதரித்தனர். ஆனால் இவர்களும் மஹிந்தவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர். மஹிந்தவை தோற்கடித்தாலும் மஹிந்தவின் கொள்கைகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதை தோற்கடிக்கும் வரையில் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாது. அதேபோல் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான பாதையினை இவர்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
எனவே தெரிந்தே இவர்கள் செய்யும் தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு அந்தக் கட்சி சார்ந்த விடயமாகும். அதை காரணம் காட்டி நாட்டில் ஏற்படவிருக்கும் முக்கிய மாற்றங்களை தடுத்துவிடக் கூடாது. மஹிந்தவா அல்லது மைதிரியா கட்சியின் தலைவர் என்பதை கட்சிக்குள் தீர்மானிக்க வேண்டும், இந்த விடயத்தை நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.