பாடசாலைகளுக்கு நேரடியாகச்சென்று, ஆசிரியர்களின் விவரங்களை காவல்துறையினர் திரட்டிவருகின்றனர். இதன்மூலம், உளவியல் யுத்தத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது இலங்கை ஆசிரியர்சேவை தொழிற்சங்கம்.
ஆசிரியர்களின் விவரங்கள், தொழிற்சங்க ஈடுபாடுகள், அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விவரங்களை காவல்துறையினர், அதிபர்கள் ஊடாகத் திரட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், காவல்துறையினர் ஆசிரியர்களையும் அதிபர்களையும் உளவியல் ரீதியில் அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இதனைத் தெரிவித்தார். இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, உடன்நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சின்செயலாளரிடம் எழுத்து மூலம்வேண்டுகோளை விடுக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுவதன் மூலம் அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது எனத் தெரிவித்துள்ள மஹிந்தஜயசிங்க, ஆசிரியர்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களின் தொழிற்சங்கங்களைக் கலைப்பதன் மூலம், அவர்களை அச்சுறுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.
இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது என அவர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு நேரடியாகச் செல்லும் காவல்துறையினர் தகவல்களைத் திரட்டுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.