மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதியில் உள்ள கிராம மக்கள் பல்வேறு கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் நடத்தினர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட செங்கலடி –பதுளை வீதியில் உள்ள கிராமங்களான கித்துள்,சர்வோதயநகர், உறுகாமம்,தும்பாலைசோலை,கோப்பாவெளி,வெலிக்காகண்டி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக எதிர்நோக்கப்பட்டுவரும் எட்டுக்கும் மேற்பட்ட பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காணாமல் போனோரை மீட்டுக் கொடுத்தல், காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துதல் (சர்வோதய நகர், கித்துள்), காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (கித்துள்), உள் வீதிகளை புனரமைப்பு செய்தல் (கித்துள்) மலசல கூடப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருதல், நிரந்தர குடிநீர் வசதி (சர்வோதய நகர்), பெண்களுக்கெதிரா துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துதல் ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் “போராடுவோம்,போராடுவோம் எங்கள் தேவைகளுக்காக போராடுவோம்”,”அரசே கற்பை சூறையாடும் விசமிகளை தூக்கில்போடு”,அரசே காணி அனுமதிப்பத்திரத்தினைப்பெற்றுத்தா”,யானைப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுத்தா போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Home
ஈழச்செய்திகள் செங்கலடி – பதுளை வீதி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!