ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 33ஆவது நினைவேந்தலை கடைப்பிடிக்க சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்றைய பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
வணிகர் கழகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்களும் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்தன. இதனால், தமிழர் தாயகப் பகுதிகளில் பூரண கடையடைப்பு காணப்பட்டது.
எனினும் அரச நிறுவனங்கள், அரச போக்குவரத்து போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கின. ஆனாலும், மக்கள் வருகை இல்லாமையால் அவை வெறிச் சோடிக் காணப்பட்டன. இதேபோன்று பாடசாலைகளும் மாணவர்களின் வரவின்மையால் இயக்கமின்றி இருந்தன. எனினும், மருத்துவமனை, மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கின.
வடக்கில்…
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் காணப்பட்டன.
சந்தைகள் இயங்கவில்லை. மாணவர்களின் வரவின்மையால் பாடசாலைகளும் இயங்கவில்லை.
போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத் தப்பட்ட அளவில் இயங்கியபோதும், மக்களின் நடமாட்டம் மதியம் வரை மிகமிகக் குறைவாகவே காணப்பட்டது.
எனினும் நகரப் பகுதிகளிலும், முக்கிய சந்திப் பகுதிகளிலும் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
முஸ்லிம்களும் ஆதரவு
யாழ்ப்பாணம், வவுனியாவில் முஸ்லிம் மக்களும் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். எனினும் வவுனியாவில் சிங்கள மக்கள் செறிந்துள்ள பகுதிகளில் மட்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு காவல்துறையினர் வலுக்கட்டாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
கிழக்கில்….
கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத் தில் பூரண பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டது. முஸ்லிம் மக்களும் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு அளித்தனர். திருகோணமலை, அம்பாறையில் தமிழர்கள் மட்டும் செறிந்து பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.